இறவாக்காதல் (11)

......இறவாக்காதல்...
( பாகம் 11)

நித்திரை விலகிய இரவினில், குமையும் மனதுடனும் கலங்கிய விழிகளுடனும், செய்வதறியாது அமர்ந்திருந்தாள் கவிதா. ஏன் இந்த தவிப்பும்.. துடிப்பும்... விடை கிடைக்காமல் விடியலில் எழுந்து, குளித்து பூஜையறைக்கு வந்தாள். "இறைவா சொல்லொணா வேதனையில் மனம் துடிக்கின்றது.. மனதை ஒரு நிலைப்படுத்து" மனமாற வேண்டினாள். உடலும் உள்ளமும் ஒருசேர சோர்வடைந்தபடி பள்ளிக்குச் சென்றாள். பள்ளியில் ஆசிரியர்களின் அறையில் நுழைந்தபோது, அங்கே இருந்த சக ஆசிரியர்கள் அன்றைய நாளிதழைப் பிரித்து வைத்துக்கொண்டு மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். தன் இருக்கையில் அமர்ந்தபடி அருகில் உள்ள சக ஆசிரியையிடம் விவரம் கேட்டாள். "பாவம் கவிதா.. ஒரு ஆசிரியர் 4 மாணவர்களும் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாச்சாம். அதைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் " ஆசிரியையின் அலட்டலில்லாத பேச்சு இவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஓடிப்போய் நாளிதழை வாங்கி அவசர அவசரமாகப் படித்தாள்.

தமிழாசிரியரும், மாணவரும் பலி... 3 மாணவர்கள் கவலைக்கிடம் என்ற தலைப்பு செய்தி, ஈட்டியை இவள் இதயத்தில் சொருகிய மாதிரி ஒரு வலி. மேலே படித்தாள். கண்ணன் என்ற ஆசிரியர் தம் 4 மாணவர்களை ஒரு கணிதப்புதிர் போட்டிக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் வழியில், எதிரில் வந்த வேகக்கட்டுபாட்டை இழந்த லாரியினால் மோதப்பட்டு, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிரியரும், அவர் அருகில் அமர்ந்திருந்த சரவணன் என்ற மாணவனும் விபத்து நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த வேளையில், மேலும் 3 மாணவர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி விரிவாகப் போடப்பட்டிருந்தது. ஒரு ஆடவனின் புகைப்படமும், ஒரு சிறுவனின் புகைப்படமும் பிரசுரமாகியிருந்தது." இந்த அழகிய ஆண்தான் என் கண்ணனா? அதிர்ச்சியில் அவள் கால்களிரண்டும் செயலிழக்க, அருகில் உள்ள மேஜையைப் பிடித்து சமாளித்தபடி அமர்ந்தாள். எப்போதுமே தன் உணர்வுகளை வெளிப்படையாக பொதுவில் காட்டும் பழக்கம் இல்லாததால், அருகில் மற்றவர்கள் இருப்பதை உணர்ந்து மிகவும் பிரயத்தனம் எடுத்து சிதற நினைக்கும் கேவலை அடக்கியபடி அப்படியே சிலநொடிகள் உட்கார்ந்திருந்தாள்.

தலமையாசிரியரிடம் சென்று உறவினர் மரணம் என்று கூறி விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். தன் அறைக்குள் வேகமாக நுழைந்த கவிதா, மீண்டுமொருமுறை கையோடு எடுத்து வந்திருந்த நாளிதழைப் படித்தாள். "கண்ணா.....' என்று அறையே கிடுகிடுக்கும்படி அலறினாள். அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை. இதயம் வெடித்துவிடும்படி ஒரு வேதனை. அழக்கூட திராணி இல்லாமல் அப்படியே கண்ணன் புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி சிலையாய் அமர்ந்து விட்டாள். அவளின் ஐம்புலன்களும் வேலை செய்ய மறுத்தன.. கண்ணனின் பெற்றோர் மூலம் விவரம் தெரிந்த அவள் தாய் தன் அண்ணனுடன் அவள் பள்ளிக்கு சென்று அவளைத்தேடி, அவள் வீட்டிற்கு வந்த விஷயமறிந்து வேகவேகமாக வீடு வந்து சேர்ந்தார்கள். செதுக்கிய சிலை போல் எந்த உணர்வுமின்றி உன்மத்தம் பிடித்தவள் போல் அமர்ந்திருந்த மகளைப் பார்த்த தாய் அதிர்ந்தாள். "கவிமா.." தாயின் வாஞ்சையான குரலில் சிலிர்த்தபடி திரும்பியவள், மௌனமாக தாயை நோக்கினாள். "கவிமா.. கவிக்கண்ணு.. அப்படி பார்க்காதம்மா.. அழுதிடு... வாய்விட்டு அழுதிடு... இப்படி இருக்காதே." ஒரு அழுத்தத்துடன் அமர்ந்திருந்த மகளைக் கெஞ்சினாள் தாய்.

"சரி. சரி.. விறுவிறுவென்று கிளம்பு.. இப்போது கிளம்பினால்தான் 3 மணி நேரத்தில் அங்கு போய் சேரமுடியும்." தாயின் அவசரப்படுத்தல் அவளுக்கு வினோதமாக இருந்தது. "எங்குமா போகணும்..? உயிருக்குயிரான கண்ணனுக்காக நான் காத்திருக்கையில், அவரின் உயிரற்ற ஜீவனைப் பார்க்க என்னை அழைக்கின்றீர்களே,, என்னம்மா இது.. என்னால் அவரை அப்படி பார்த்துவிட்டு உயிரோடு திரும்ப முடியுமா?.. வேண்டாம்.. வேண்டாம் நான் வரவில்லை. வரமாட்டேன்.. என் கண்ணன் என்னைத் தேடி இங்கு வரட்டும்.. நான் வரமாட்டேன்" என்று கதறி அழத்தொடங்கினாள். ஆறுதல் சொல்ல வழிதெரியாத தங்கையை ஒரு கண்ணசைவில் வெளியே அழைத்தார் அவர் அண்ணன். அவளை வற்புறுத்த வேண்டாம்.. அவள் போக்கிலே விட்டுவிடுவோம், நாம் மட்டும் போய்வருவோம் என்ற தமையனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கவிதாவின் தாய் மகளை அணைத்து முத்தமிட்ட பின் கண்ணனின் சவ ஊர்வலத்திற்குச் சென்றாள்.

நள்ளிரவாகிவிட்டது கவிதாவின் அம்மா வீடு திரும்பும்போது. அவசரமாக மகளைத்தேடிச் சென்றவள் அவள் இருந்த கோலம் கண்டு அதிர்ந்தாள். காலையில் உடுத்தியிருந்த உடையைக் கூட மாற்றாமல் கண்ணன் புகைப்படமிருந்த நாளிதழை மார்போடு அணைத்தபடி விழிமூடி படுத்திருந்தவளின் முகம் அழுதழுது வீங்கிப்போயிருந்தது. எழுப்ப நினைத்து மெல்ல அவளைத்தொட்டப் போதுதான் உடல் அனலாய் கொதிக்கின்றதையும், வாய் "கண்ணா....கண்ணா" என்று அரற்றிக் கொண்டிருப்பதையும் உனர்ந்தாள் தாய். மனம் துணுக்குற்றது. 12 வருடங்களுக்கு முன் கண்ணன் வீடு மாறிப் போகையில், இப்படித்தான் காய்ச்சல் வந்து மகள் கண்ணன் பெயரை அரற்றிக் கொண்டிருக்கையில், அவளைச் சமாதானப்படுத்த, இன்னும் 5 வருடங்களில் கண்ணன் மீண்டும் இங்கு வந்திடுவான்,,,உன்னோடு சேர்ந்து படிப்பான் என்று ஆறுதல் கூறியது நினவில் நிழலாடியது. "ஐயோ...! அறியா வயதில் சமாதானமான பெண், இன்று திரும்பி வர இயலாத இடத்திற்கு சென்ற கண்ணனைப் பற்றி என்ன சொல்லி ஆறுதல் படுத்துவேன்" தாய்மையுணர்வில் தவிக்கும் தாயின் விழிகள் குளமாகின.... "என்னங்க.... உங்க மகள் நிலையைப் பார்த்தீர்களா.. இந்த வேதனையை தனியே அனுபவிக்கும்படி என்னை விட்டு விட்டு நீங்க நிம்மதியாக போய்விட்டீர்களா" இறந்த கணவனிடம் மானசீகமாக முறையிட்டாள் செய்வதறியாது புலம்பிய தாய்.....

நீடிக்கும் புலம்பலோடு மீண்டும்.........!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (27-Aug-13, 7:29 am)
பார்வை : 236

மேலே