சாவி

காட்டுக்குள் ஒற்றையடி கவிதை.. கவிதையில் பதிந்த கால்களில் காடு மிரண்டது... தேடல் உருண்டது.. தேகம் வரண்டது.... மௌனம் உடைந்த மேகம் மழையாய் பொழிய, கவனம் உடைந்த மனிதன் மழையில் நனைய, சிறு கண்கள் கொண்ட பெரும் பார்வையில் உலமெங்கும் காடுகளே தவழ்ந்து கொண்டிருந்தன..... காடுகளை அடைவதே மனங்களின் குதியாட்டம்.. இருந்தும் எதிமறையாக தவித்துக் கொண்டும், குதித்துக் கொண்டும் கிடந்தது அவன் மனம்...நடந்து கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான்..... வந்த பாதை தன்னை சுருக்கிக் கொண்டே வருவதாக மாயம் செய்து கொண்டிருந்தது, ஒரு மாயம். அவன் புலம்பலை, சற்று உற்று கேட்டால் உணர முடிந்தது...அழுகையின் குறியீடு இந்த மழை...... ஒ வென உற்சாகமாய் அழுது கொண்டிருந்தது...அவனைப் போலவே....

நேற்று வரை விழி பார்த்தவள், விரல் கோர்த்தவள் மடி சாய்ந்தவள், சட்டென உடைத்துப் போட்ட வானவில்லை தூக்கி சுமக்கின்றான் மாய சிலுவையென.....இணைவது மட்டுமல்ல காதல்.. பிரிவது கூட.... எவன் சொன்ன தத்துவத்தில் பிழையாகி விளைகிறது பெண்ணின் துரோகம்....

கேட்டால், பெண் மனம் ஆழம், அதற்குள் திறக்கப்படாத பூட்டொன்று எப்போதும் மௌனம் கொண்டே கனன்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் .. திறந்து கிடந்த ஆண்களின் ஜன்னலை சட்டென அடித்து மூடி சுவாசம் பறித்துப் போவதை காலம் ஆற்றி விடும், கவனம் திருப்பு என்கிறார்கள்.....

அள்ளி அள்ளி காதலை தருபவள் சந்தர்ப்பம் கிடைத்ததில் கொள்ளி வீசி போவதையும், காதலில் ஒரு பகுதி என அவனால் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை....எந்த பறவையாவது தன் காதலனை ஏமாற்றிப் போகிறதா? மனிதன் மட்டும் ஏன் துரோகம், வஞ்சகம், ஏமாற்று என்று தன் முகத்தை மாற்றிக் கொண்டே திரிகிறான்.....இனி நனையஅவனில் மிச்சமில்லை....இங்கே மனித சந்தேகம்........ நனைத்தது மழையா, அவன் கண்ணீரா......?

கடந்து செல்லும் ஒவ்வொரு மரமும் போதனை பெற்றுக் கொண்டிருப்பதாகவே அவனின் ஆழ் மனம் நம்பி சென்றது.....இலை தொட்ட சிறு துளி....அவன் பாத அதிர்வில் பெருந்துளிகளால் புன்னகை சிந்துவது, இவனின் அரங்கேறப் போகும் தற்கொலைக்கு, மாலைகளுக்காக, பூக்கள் தருவதாக ஒப்புக் கொண்டதாகவே உணர்த்தியது....

நாடே காடுதான் என்று அவன் இனி அடித்து சொல்லலாம்.....அப்படி காடும் காடு சார்ந்த பார்வையும்.... மலையேற ஆரம்பித்த இந்த முப்பது நிமிடங்களில் அவன் உணர ஆரம்பித்து விட்டான். உணருதல் காலம் தாண்டிய உணர்வு.....விட்டுச் சென்றவளின் செவிகளில் என் மரண ஓலம் அமிலமாக சொட்ட வேண்டும்....என் பிணத்தின் கடைசி காட்சியில் பதிந்து போகட்டும் அவளின் நிலைக் கண்ணாடி....அவள் பொட்டிடும் நிமிடங்களில் எனது குருதி வழிந்தோடட்டும் ...காதலின் வலி மரணம் மட்டுமல்ல ..... வாழ்வும் கூட....என அவள் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நாளிலும் ஒரு பெருங்காடு பேய் பிடித்து சிரிக்கட்டும்.....

நெருங்கி விட்டான் இதோ....... அதோ தெரியும் உச்சி மலையில் ஓடி வந்து குத்துக்கும் பிடறி தவழும் வெள்ளைக் குதிரையென ....காட்டாறு திமுதிமுவென கொட்டம் அடித்தபடி வீழ்ந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டே நெருங்கிக் கொண்டிருந்தான்.......அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள் காதலி....மொத்த வாழ்க்கைக்கான அன்பை கொட்டி கொட்டிக் கொடுத்தவள் , சுண்டு விரல் விடுத்து மெல்ல விலகிய போது யாருமற்ற புகை மூட்டத்துக்குள் நழுவி வீழ்ந்து கொண்டிருந்தானே.... அங்கே தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது....அவனுக்காக பெயர் தெரியா பறவை கட்டிய சிறு கூடு....

மலை உச்சி... மரணத்தின் வாசல். தலை மேல் அமர்ந்திருந்த சாத்தான் அழுவது போல் பாசாங்கு செய்வதை அவன் நம்புவது போல் கண்கள் விரிய பார்த்தான்...கீழே குதித்துக் கொண்டிருந்த செத்துப் போன அருவியிலிருந்து உருண்டு திரளும் ஒவ்வொரு குமுழிலும் மரணத்தின் நகங்கள் பூச் சொறிந்து கொண்டிருப்பதாக சாட்டையை சுழற்றும் காதலி கற்பித்துக் கொண்டிருந்தாள்... ஆற்றில் சங்கமம் ஆகு.... கசப்புகளை மறுப்பதற்கான வரம் அது... காதலியை கொல்வதற்கான உரம் அது.... தேடுவதை விட தொலைதலில் சுகம் அதிகம்.... அவன் தயாராகிக் கொண்டிருந்தான் .. கால்கள் நடுங்கியது.. காதல் தடதடத்தது... காதலி பட்டாம் பூச்சியை பிச்சு பிச்சு பறக்க விட்டுக் கொண்டிருந்தாள்.. அவன் கண்கள் சுழன்றது...

உலகமே இருட்டானது போன்ற.....


- அந்த எறும்பு கூட்டம், இப்போது மீண்டும் தவற விட்டது, இத்தனை நேரம் தூக்கி கொண்டு சென்ற சாவியை...அந்த சாவி ஒரு பாறையின் சந்தில் சிக்கி நேராக நிற்க வைத்தது போல நின்று கொண்டிருக்க மெல்ல இறங்கி வந்து கொண்டிருக்கின்றன...மீண்டும் சாவியை தூக்க நினைக்கும் எறும்பு கூட்டம்....

அதே வேகம், அதே ஆர்ப்பரிப்பு .. கன்னிப் பெண் கண்ணடித்தாலும் காட்டாறு காட்டாறு தான்....ஆனால் கவிதையாக.....

ஆர்ப்பரிக்கும் கவிதையொன்றாய் வெள்ளுடை தரித்து யாரைத் தேடி ஓடுகிறாள்.. ஆம் காதலாய் நிரம்பி ததும்பும் தண்ணீர், காட்டைத் தேடி சூடிக் கொள்ள உணர்ந்த தருணமாகவே இருக்கிறது... அந்த உச்சிப் பாறையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு காட்சிகளை அள்ளியெடுத்து பூத்தொடுத்துக் கொண்டிருக்கும் அவன்..... எதற்கு மரணிக்க வேண்டும் ... மரணம் என்பது முடிவா... இல்லையே..... தொடர்ச்சியின் விரல் பிடித்ததாகவேதான் உணருகிறான்....காதலி மீது இப்போது கோபம் கொள்ள தூண்டாத ஒன்றை ஒரு தற்கொலை விதைத்து விட்டதாக நினைக்கிறான்.... பிரிந்தாலும் காதலிதானே.. உறைந்தாலும் காதல் தானே.....

அதோ பறக்கும் பறவைக்கு காதல் தோல்வியென்று எவனுக்குத் தெரியும்.. விழுகின்ற மழை என்ன தோல்வியின் மரணமா...? உயிர் நீந்தலின் மிச்சம் புலம்பலே.... அவன் புலம்பிக் கொண்டிருக்கிறான்.... அவனால் மழையை உணர முடியாமல் விழிக்க மட்டுமே முடிகிறது....

காதலிக்காக காலம் முழுக்க வேண்டியிருக்க வேண்டிய கைகள் செயல் இழந்து பூக்கள் உதிர்ப்பதை கலங்கிய கண்களுடன் காண்கிறான்...இத்தனை அற்புதமா . காடும் வாழ்வும், காதலும்..... காதலில் ஏது தோற்றுப் போவது..... கணங்களில் சேர்ந்த கைகளின் சூடு எப்படி ஆறிப் போகும்....அவன் கால்களை ஆட்டிக் கொண்டே சிந்திக்கிறான்.... சுயநலம்.. அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற பேராசை.. பறவையின் மீது கொண்ட காதல், அது பறப்பதிலேதானே இருக்கிறது ....

விட்டுச் சென்றவளின் மனதும் எடுத்து தானே சென்றிருக்க வேண்டும்.... புரியாத மனம் கொண்ட மரணமும் புரியாமலே விழித்துக் கொண்டிருக்கிறது.. தீராக் காதலில் சந்திப்பும், உடலும் தேவையில்லையே.. தற்கொலை மரணம் ஒரு போதும் காதலை வளர்ப்பதில்லை.. அது காதலை காலம் முழுக்க குறைத்து கொண்டே இருக்கிறது....இறந்தவன் மனதில் தெளிவாய் ஓடுகிறது... காட்டாறும், ஆறாத காதலும்.... வெற்று சுவரும் உற்று நோக்கின் ஓவிய கூடம்.. விட்டுச் சென்ற பின்னும் வாழ்ந்து பார்... காதல் வாழும்.. அவனால் அழ கூட முடியவில்லை..உணர்ச்சிகள் தாண்டியவன் காற்றட்ட , மரங்களற்ற பால்வெளியில் தன்னை சுமக்க முடியாமல் சுமந்து செல்ல தயாராகும் ஒரு பயணத்தின் ஏற்பாடுக்குள் தவழ ஆரம்பித்திருக்கிறான்.

வாழ்வே தீர்வாகாது என்கிறபோது தற்கொலை எப்படி தீர்வாக முடியும்? தேடாமல் இருப்பதும் தொலைந்து போவதும் ஒன்று தான்.. காதல் தேடல் எனில் தேடுவதுதான் வாழ்க்கை...அவன் ஓ வென கத்துகிறான்... ஆசைக்கு கூட அழ முடியாமல் தவிக்கிறான்...

அந்த எறும்பு கூட்டம் இப்போது பாறையில் சிக்கி நின்ற சாவியை தூக்கி செல்கையில், கால் தவறி தடுமாறியதில் சாவி பின்னோக்கி விழுகிறது.....

இதோ உச்சிப் பாறையில் நின்று தற்கொலை செய்து கொள்ள போகும் அவனின் கண்கள் சுழல....அவன் கண்களில், சற்று வலப்புறம் இருந்த ஒரு பாறையின் இடுக்கில் வளர்ந்திருந்த செடியில் அழகாய் பூத்திருந்த ஒரே ஒரு.....பூ, இதழ் சிவந்து விழி கிறங்கி நிற்கும் அவனின் காதலியின் முகத்தை நினைவு படுத்த, உலகமே வெளிச்சமானது போல ஒரு தோற்றம் மனதிலிருந்து எழும்ப எதற்கு சாக வேண்டும்? காதலி தானே பிரிந்தாள்..... காதல் இல்லையே....அவள் வாழும் உலத்தில் தானும் வாழ்வது தானே காதல்...அவள் பார்த்த வானத்தை தானும் பார்ப்பது தானே காதல்.....அவள் நனைந்த மழையில் தானும் நனைவது தானே காதல்.....அவளின் நினைவுகளை விடவா பெரியது எனது ஏக்கம்....

அவள் உச்சிமலை பூ..... அவன் காற்று....

ஒரு பெருவாழ்வு மழையென பொழிய ஆரம்பித்தது....கண்கள் மூடி நனைந்தவன் மெல்ல மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான்...அவன் வந்து கொண்டேயிருந்தான்....சற்று கீழே வந்தவன், சந்தோசங்களின் பட்டாம் பூச்சியை சுமந்தபடியே நடந்து கொண்டிருந்தான்.....

அந்த எறும்பு கூட்டம் இப்போது பின்னாலிருந்து தூக்கி வந்த சாவியை, மீண்டும் ஒருமுறை கால் தடுக்கி விட...சாவி எதிரே போய் விழும் என்றே நினைத்த எறும்பு கூட்டம் அப்படியே நடந்ததில் சாவியை தூக்க முன்னோக்கி ஓடியது.....

அதே உச்சிப் பாறையில் நின்று கொண்டிருந்த அந்த பெண் மழையில் நனைந்தாளோ கண்ணீர் துளியில் நனைந்தாளோ,ஆங்காரமாய், ஓங்காரமாய், அழுது கொண்டும் அரட்டிக் கொண்டும், தலை விரி கோலமாய், விழும் ஆற்றை விரிந்த கண்களோடு....பார்த்துக் கொண்டேயிருந்தவள், கண நேரத்தில் குதித்து விடுவாள் என்றே காடும் மலையும், மழையும் நம்பியது... ஆம் அது நடந்தது ...அது ஒரு கோர பார, தற்கொலை .....

அந்த எறும்பு கூட்டம் இப்போது, முன்னால் விழுந்து கிடந்த சாவியை தூக்கிக் கொண்டு நடக்க, திரும்பவும் கால் தடுக்கி, சாவி ஒரு பூச் செடிக்குள் சிக்கி நேராக நின்று கொண்டிருக்கிறது.....

பட்டாம் பூச்சியை சுமந்து கொண்டு கீழே வந்து கொண்டிருந்தவனை தலை விரி கோலமாய் ஒரு பெண், கடந்து மலை மீது ஏறிக் கொண்டிருக்கிறாள்... சற்று கவனம் பெற்றவன், சட்டென திரும்பி அவளைப் பார்க்கிறான்.....

- அந்த எறும்பு கூட்டம் சாவியை இன்னும் கண்டு பிடிக்கவில்லை......

எழுதியவர் : கவிஜி (27-Aug-13, 10:20 am)
Tanglish : saavi
பார்வை : 1657

மேலே