இரவு...!

இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை நான் எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் அதுஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்து சொந்தங்களாய்... கண் சிமிட்டி அழைக்கும். பெரும்பாலும் சூரியன் தொலைத்த பூமி...உஷ்ணத்தை விழுங்கி விட்டு..சிலிர்ப்பாய் குளிர் சிரிப்பு சிரிக்கும். ஏதேதோ மெல்லிய சப்தங்களையும் துல்லியமாய் கொண்டு வந்து காது சேர்க்கும்.

ஆமாம் இரவு தன்னிடம் தேக்கி வைத்திருப்பது....பிரபஞ்சத்தின் மூலத்தை. உறக்கம் கலைத்து அல்லது கலைந்து வெறுமையாய் இருக்கும் ஒரு கணம்...அந்த கணம் எப்போது நிகழும் என்று என்னால் வரையறுத்துக் கொடுக்க இயலாது...ஆனால் எதிர்பார்ப்புகள் தொலைத்த அந்த அற்புத கணத்தில் ஆச்சர்யமாய் தனது இருப்பினை நம்மீது போர்த்தி கண் சிமிட்டி....நலமா என்று நலம் விசாரிக்கும் அற்புத இரவு.

பெரும்பாலும் இரவுகள் இங்கே அலைக்கழிக்கப்படுகின்றன...அல்லது அயற்சியில் உறங்கி விழுங்கப்படுகின்றன. காமத்துக்கும், கனவுக்குமே பயன்பட்டு பயன்பட்டு மழுங்கிப் போய் கிடக்கிறது இரவு எல்லோரின் மனதிலும். வாரத்தில் ஒரு நாள்... வேண்டாம்....மாதத்தில் ஒரு நாள் தனியாய் எதிர் கொள்ளுங்கள் இரவை....காதலோடு...

துணை வேண்டாம்; இசை வேண்டாம்; வாசிக்க புத்தகமும் வேண்டாம்....சுற்றியுள்ள சூழலும் நீங்களும்.அவ்வளவே.....! அன்றைய தினத்தின் அயற்சிகள் எல்லாம் அழுக்குகளாய் நகர்ந்து போக உலகத்தின் மிகைகள் உறங்கி கொண்டிருக்க நீங்கள் விழித்திருங்கள்.....இரவை நீங்கள் வழி நடத்துங்கள்...அப்படி நடத்த இரவோடு இரவாக கலந்து போய் விடுங்கள்....

சப்தங்கள் கழிந்து
ஒரு மோன நிலையில்
எப்போதும் ஆழ்த்தும் இரவு....
மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!

ஆமாம்.. இரவு எப்போதும் கவனங்களைச் சிதற விடுவதே இல்லை...முன்பே சொன்னது போல தாயின் கருவறைக்குள் அசைவுளற்று விழித்திருக்கும் குழந்தையாய்..காத்திருக்கும் பொழுது சட்டென்று மூளைக்குள் இறைத்துப் போடுகிறது இரவு..ஓராயிரம் கவிதைகளை...! யாருமே இல்லாமல் வெறுமனே காதல் உணர்வினை புட்டியில் வைத்து ஊட்டும் பால் போல புகட்டுகிறது அந்த ஆழ்ந்த கருமை....

யாருமற்ற இரவோடு சல்லாபித்துப் தனித்து இருந்து பாருங்கள்....வாழ்வின் அழகு பிடிபடும்.

எழுதியவர் : Dheva.S (29-Aug-13, 12:50 pm)
பார்வை : 96

மேலே