அழகாக வாழுங்கள்
சந்தோஷ ராகங்கள் எடுத்து
..சங்கீதம் பாடுங்கள்
சந்தேக மேகங்கள் களைத்து
..சன்மார்க்கம் தேடுங்கள்
மந்தகாசம் இதழோரம் தொடுத்து
..மழையாக பெய்யுங்கள்
வந்ததுயர் மாறட்டு மென்று
..வசந்தத்தை நாடுங்கள்
இல்லாத பொருளுக்காய் வாழ்வை
..இல்லாது ஆக்காமல்
செல்லாத பயணத்தால் நெஞ்சை
..செல்லரிக்க வைக்கமால்
பொல்லாத எண்ணத்தால் பிறரை
..புரியாது வாடாமல்
நல்லெண்ணத் தோடென்றும் நீங்கள்
..நல்வாழ்வு வாழுங்கள்.
நிறுத்தங்கள் கண்டாலும் அங்கு
..நிறுத்தாத பேரூந்தாய்
இருக்கின்ற காலத்தில் யார்க்கும்
..ஈயாது வாழாமல்
வருத்தங்கள் கொண்டோர்க்கு துன்பம்
..வழிந்தோட வைக்கின்ற
அருத்தத்தைக் காண்பித்து மண்ணில்
..அழகாக வாழுங்கள்.