என் பிறவா மகளுக்கு..!

கருவில் அறிந்து களிப்புற்று
கதறி பெற்றுனை கண்டாலும்
காலடி வைத்தால் கள்ளிப்பால்
கயவர் தந்து கொன்றிடுவார்

கட்டி அணைத்து வளர்தாலோ
காதல் வலையில் வீழ்த்திடுவார்
காதல் இதயம் இல்லையென்றால்
கடும் ஆசிட் வீசி சிதைத்திடுவார்

காம கூட்டம் கண்பட்டால் உனை
கசக்கி விட்டு கொல்வாரே
கல்யாண சந்தையில் விலைபோக
கட்டு கட்டாய் பணம் கேட்பாரே

கண்ணீர் வடித்து கம்பியெல்லாம்
கரைந்து துருவாய் போனாலும்
கைபிடித்து கரை சேர்க்க
கடைசிவரை வரமாட்டார்

பிறந்தால் உனக்கு பல துன்பம்
பிறவாமல் எனக்கு ஒரு துன்பம்
பிறர் தருவார் சுடு சொல்லாலே
பிறவா ‘மலடி’ எனும் கல்லாலே

பிறக்கா மகளே உனக்காக
பிறவி கொடுக்க நானில்லை
உனை பிறவா மலடியாய் இறந்தாலும்
உச்சி முகர்ந்து உனை வாழ்த்துகிறேன்..!

(பிறவி எடுக்கா மகளுக்காக)

எழுதியவர் : குமரி பையன் (30-Aug-13, 2:10 am)
பார்வை : 135

மேலே