எங்கு வைப்பது முத்தங்களை...

காலைக் கதிரவன்
பூமியில் கால்
பதித்த நேரம்..
நீ அபிஷேகம் செய்து
கொண்ட போது
உன் கூந்தலில் குடியேறிய
புனித நீர் துளிகள்
என் கன்னத்தில்
பட்டு விழித்தேன்...
தினமும் என் தூக்கம்
கெடுக்கும் உன்
பௌர்ணமி முகம்!
இரவிலோ கனவுத் தொல்லை,
அதிகாலை அம்மன் தரிசனம்...
நாள் ஆரம்பம் அருமை.

ஈரக்கூந்தல்,
இறுக்கிக் கட்டிய புடவை,
எடுப்பான குங்குமம்,
நூறாண்டுகள் ஆனாலும்
என் மனம் பார்க்கத்
துடிக்கும் உன் முகம்,
அறை முழுவதும்
உன் வாசனை...

யாரால் முடியும்
உனைப் பிரிய?
பல முறை முயன்று
தோற்றவன் நான்...
உன் கரம் பற்றி
கள்ளி உனை அள்ளி
என் நெஞ்சோடு
அணைத்துக் கொள்வேன்...
ஒரு குரல் உனை
அழைக்கிறதா?
அது யாருமில்லை...
நீ கேட்டது என்
இதயத் துடிப்பை!

வெயில் என்ன,
மழை என்ன...
என் தலையே போனாலும்
உனை விடமாட்டேன்... ஆம்
நான் அணைத்திருக்கும்
உன் ஸ்பரிசம்
நதி வடிவில்
வளைந்து நெளிந்த பெண்மை !
ஆனால்,
அதை விட உண்மை...
உன்னை ஒரு நொடி
பிரிந்தால் கூட
வாடிப் போகும்
என் தன்மை !

எட்டு ஊர்
திரும்பிப் பார்க்கும்
உன் திருமுகம்
என் கைகளில்!
அன்னம், நீர்
மறந்து முத்தங்கள்
தர துடித்திடும்
என் இதயம்!
என்ன அவசரம்?
என்னவள் நீ.
இரவல் பொருளல்ல...
ஒவ்வொன்றாய்
ஆராதிப்பேன்!

மேடான நெற்றி... அதில்
அழகுக்கு அழகு
சேர்க்கும் பொட்டு!
வலதும் இடதுமாய்
கண்களை காக்கும்
நேர்த்தியான புருவம்!
கிறங்கடிக்கும் காதல்
பொங்கும் கண்கள்...
இரவில் நீ
வானம் பார்க்காதே...
உன் கண்கள் கண்டு
நட்சத்திரங்கள்
தற்கொலை செய்திடும்!

எரிமலையாய் வெடித்து,
புன்னைகையில் பனிமலையாய்
புதையும் மிளகாய் மூக்கு!
வெட்கத்தில்
செவ்வானமாய் சிவந்திடும்
உன் கன்னங்கள்...
உன் சிவந்த கன்னத்தில்
சிரிப்பைக் காண
ஏழேழு கடல்,
மலைகள் கடந்திடுவேன்!
கலகலப் பேச்சு
தித்திக்கும் புன்னகை
அத்தனைக்கும் காரணம்
உன் ரோஜா இதழ்கள்...
என் காதல் சொல்ல
உன் காது மடல்
தேடிப் போனேன்...
உன் காதோடு
சொல்லும் முன்னே,
கூந்தல் காட்டோடு
காணாமல் போனேன்!

உனை ரசித்தாலே
எனக்குத் தலைவலி...
என் கண்கள்
சிமிட்ட மறந்திடுவேன்....
ஒரு பெண்ணுக்குள்
எத்தனை அழகு...
பார்ப்பவனுக்கு
பித்துப் பிடிக்கும்...
சந்தேகமே இல்லை
நீயே அழகின்
முதல் பதிப்பு...

ஏதேனும் ஒன்று
அழகென்றால் சரி...
ஒவ்வொன்றும்
அழகென்றால்? எங்கு
வைப்பது முத்தங்களை...
நெற்றியில் வைத்தால்,
கண்கள் கலங்கிடும்,
கண்களில் வைத்தால்,
மூக்கு விடைத்திடும்,
மூக்கை கொஞ்சினால்
இதழ்கள் இடைமறிக்கும்,
இதழை கொஞ்சினால்
கன்னம் சிவக்கும்,
உன் கன்னம் கடித்தால்,
உன் காது நான்
சொல்வதை கேட்காது!

இத்தனை அழகையும்
ஆர அமர
ரசித்து ருசித்து
கொஞ்சி முடிக்க
ஒரு ஜென்மம்
போதாதடி பெண்ணே :)

எழுதியவர் : ஷிவா (1-Sep-13, 4:12 pm)
பார்வை : 186

மேலே