வானம் பார்த்த பூமி...!!! (Mano Red)
கந்தக பூமி
காய்ந்த நிலம்
கஞ்சிக்கு வழியின்றி
கருவாடாய் வாடும் முகம்..!!!
பாவம் இந்த வறுமைக் கோடுகளை
படம் வரைந்து பாகம் குறித்து
பாடம் சொல்கிறது
பாட்டாளியின் ஒட்டிய வயிறு..!!
என்றோ ஒரு காலம்
வகுந்தெடுத்து வரப்பு கூட்டி
பக்குவமாய் பாத்தி கட்டி,
பார்த்து பார்த்து விதைத்து
நன்னாளில் அறுவடையிட்டு
பொங்கி வரும் சிரிப்போடு
பொங்கி தின்ற காலம்
போயே போச்சு மண்ணோடு..!!
ஏழ்நிலை பாட்டளியை
வாழ்நிலையில் புறந்தள்ளி
சூழ்நிலை கைதியாக்கி
வீழ்த்தி வென்றுவிட்டது
வறட்சியும் வறுமையும்...!!!
விரிசல் விழுந்தது
விளை நிலத்தில் மட்டுமல்ல
விவசாயின் வாழ்க்கையிலும் தான்..!!
வறண்டு போனது
வற்றாத நதி மட்டுமல்ல
வஞ்சனை அறியா விவசாயியும் தான்..!!
முண்டாசு கட்டியவனின் தலையில்
முக்காடு போட வைத்து,
மும்மாதமும் வர மறுக்கும்
வராத மழையை எண்ணி
வானம் பார்த்துப் பார்த்தே
வயசாகி விட்டது
விவசாயத்திற்கும் விவசாயிக்கும்..!!!
ஓ ஒய்யாரக் கடவுளே,
உப்பரிகையில் ஆடும் உனக்கு
உழவனின் அழுகுரல் கேட்குமாயின்
கொஞ்சம் விழித்துக் கேள்..!!
உன் அழுகை தான்
மழை என எண்ணி
முட்டாளாய் வாழும்
என் விவசாய மக்களை
ஏமாற்றி விடாதே,
கொஞ்சம் அழுது தீர்த்து விடு..!!
அடக் கடவுளே,
உன் கோர அழுகை கண்டு
பூமி சிரிக்குமா என தெரியவில்லை
நிச்சயம் விவசாயம் சிரிக்கும்..!!!