திசை மாறுமோ (தொடர் 3)

3, தீமையின் விழிப்பு

வட்டமிட்டே பலர் வந்து இருந்தனர்
வைத்த தொரு பெரும் மேசை - அங்கு
கட்டியுமாள்திடக் கண்களில் தீ பற்றிக்
காணுதே ஏனிந்தக் கோபம் - இதை
விட்டுவிட்டால் என்ன வாகிடும் என்றவர்
விந்தை கலங்கிய போது - அந்தக்
கட்டமைப் பில்கைகள் விட்டு நழுவிடக்
காணுமுலகென்ற தாபம்

எத்தனையோ முறை எண்ணில் பிசகற்ற
எத்துணை ஆற்றல்கள் தானும் - இவர்
புத்தியினால் பலவெற்றிகள் ஈட்டிடப்
போய்விடு மெங்களின் பேரும்
சத்தியமும் காத்து சாமி வேடமிட்டு
சித்தி விளைத்திடுங் காலம் - இங்கு
நித்திரை கொண்டிடில் நேருவது மெங்கள்
நெற்றியில் இட்டவர் நாமம்

வெட்டி ஒழிக்கட்டும் பூங்கொடிகளங்கு
வேரைஅறுத்திடவேண்டும் - அதில்
தொட்டவுடன் மனம் தீயெரிந் தாகட்டும்
தூவிக் கொட்ட நஞ்சுதானும்
பட்ட வகைகளில் பால்மரம் தானென்ன
பிஞ்சு கனி இலையாவும் - இனி
விட்டதில்லை இந்த வேளை எரியட்டும்
பொத்திடுவோம் விழிநாமும்

துட்டரும் தீயரும் பொங்கிஎழுந்தனர்
தேசமொன்றின் எல்லைமீது - அங்கு
கெட்டது நீதியும் காக்கும் அறமதும்
காகிதமேல் எழுத்தாக - பலம்
கட்டினை மீறித் தலையெழுதென்றிட
காட்சிகள் மாறும் திருப்பம் -அங்கு
தொட்டவர் கையிடை மைபடவேஇல்லை
தோன்றியதோ கருங்கோலம்

தேவர்கடைந்த அமுதினிலே யன்று
தோன்றிய நஞ்சினைப் போலே - இன்று
யாவரும் கொண்ட மனங்கள் கடைந்திட
ஆகிய நஞ்சென்னும் தோற்றம்
ஏவல் விளைத்திட என்ன நடக்கினும்
ஏதுமோர் பேச்சறியாது - எவர்
தூவினும் நஞ்சினை தோல்வி முடிவென
தோற்றம் இருந்திட வேண்டும்

எழுதியவர் : கிரிகாசன் (2-Sep-13, 4:59 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 70

மேலே