எனது நடனம்
எனது நடனம்
பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தை என்னால் அப்பொழுது உணர் முடிந்தது. என் பயிற்சியாளனின் கண்கள் பளபளப்பாய் நீர் கோத்து உணர்ச்சி வசப்பட்டு நிற்பதை என்னால் கவனிக்க முடிந்தது.
என்னை சுற்றி நிற இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று அவர்கள் முகத்தை பார்த்து தலையை குனிந்து விட்டு மீண்டும் நளினமாய் நடந்து நடு மைதானத்துக்குள் வந்து நின்று தலை குனிந்ததும் பார்வையாளர்கள் ஒரு நிமிடம் அமைதியாகி பெரும் கரகோசத்தை கொடுத்தார்கள்.
போதும் இந்த வாழ்க்கை, சுற்றி வர பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு, பயிற்சியாளனின் அணைப்புடன் கூடிய பயிற்சி, அடுத்தது ஊட்டமான உணவு, கொள்ளு, புல், மற்றும் நாட்டியம் ஆடும் போது தேவைப்படும் தசைகளின் வலிமை, திரட்சி, இவைகளுக்காக தனி உணவு.
அப்பாடா..! ஒரு காலத்தில் குடல் தெறிக்க, கண்களில் பூச்சி பறக்க என் மீது உட்கார்ந்திருந்த ஜாக்கியின் கால்களால் பிட்டத்தில் உதைபட, இன்னும் எத்தனை எத்தனை சித்ரவதைகள்?
பணம், பணம், என் மீது கட்டப்பட்டுள்ள பணம், என்னை ஒரு இடத்தில் இருக்கவிடாத ஓட்டபயிற்சி, உணவு கட்டுப்பாடு, அப்பொழுதுதான் வேகமாக ஓடுவேனாம், சுற்றி பரவசமாய் பார்க்கும் பார்வையாளர்களை விட வெறி பிடித்து பணப்பித்துடன் கூவிக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள், என்னை உசுப்பி உசுப்பி…சில நேரங்களில் இரத்தம் தெறிக்க ஓடும்போது நினைத்திருக்கிறேன் இப்படியே இதயம் வெடித்து இறந்து போய்விடுவேனோ?
இல்லை கால் இடறி கீழே விழுந்துவிட்டால்..? அவ்வளவுதான் என் வாழ்க்கை அத்தோடு முடிந்தது என்று முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான். உடைந்த காலுடன் கிடக்கும் என்னை கவனிப்பதால் என்னை வைத்திருப்பவனுக்கு என்ன பயன்? சதை கறிக்கு உணவாக கொடுப்பதாய் இருந்தால் கசாப்புக் கடைக்காரனிடம் காசுக்கு கொடுத்து விடுவான், அப்படி யாரும் உணவாக எடுத்து கொள்ளாலாததால் ஒரே ஒரு துப்பாக்கி குண்டை செலவு செய்து என்னை மேலோகம் அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார்கள்.
நல்ல வேளையாக அன்று அப்படி எதுவும் நடக்கவில்லை, போட்டி நடக்கும் நாள், துப்பாக்கி சுடும் சத்தத்துக்காக இதயம் துடிக்க காத்திருந்தோம். இதோ அறிவிப்பு ஒன்று இரண்டு மூன்று.. துப்பாக்கியில் இருந்து தோட்டா சீறிய சத்தம். அவரவர் களின் ஜாக்கியுடன் பாய்ந்து தலைதெறிக்க ஓடினோம். அவரவர்க்கு கொடுக்கப்பட்ட பாதையில்தான் ஓடி வந்தோம். முதலாவதாக வந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. என் பெயரை சொல்லி சுற்றி வர ஓரே ஆரவாரக்கூச்சலும் என் உள்ளத்துக்குள் ஒரு தீ ஜீவாலையை மூட்டியிருந்தது. ஆனால்..!
திடீரென்று என்னுடன் இணையாய் ஓடி வந்தவன், என் முன் காலின் குறுக்கே காலை வைத்து விட்டான். அவ்வளவுதான்..தெரியும் அந்த வேகத்தில் தடுமாறி இரண்டு முறை உருண்டு விழுந்து விட்டேன். என் முதுகில் அமர்ந்திருந்த ஜாக்கியும் என்னுடன் ஒரு முறை உருண்டது முதுகின் பார உணர்ச்சியில் தெரிந்து கொண்டேன், அடுத்த உருளலில் அவன் தூக்கி வீசப்பட்டிருக்கிறான்., என்று தெரிந்தது. காரணம் என் முதுகில் பாரமில்லாமல் இருந்தது.
கால்கள் உடைந்து என்னை படுக்கவைத்திருந்தார்கள். இனி இவன் பந்தயத்துக்கு லாயக்கில்லை, இவனை சுட்டு விடலாம் என்று பேசிக்கொண்டிருந்த பொழுது என்னை அதுவரை பயிற்சியும் கொடுத்து, பாதுகாத்து, என்னால் கீழே விழுந்த நண்பன் ஜாக்கி மருத்துவமனையில் கட்டுடன் படுத்திருந்த நிலையிலும், மருத்துவமனையில் இருந்து அங்கு வந்து எனக்காக சண்டையிட்டு காப்பாற்றினான்.
அவனால் இன்று நான் இதோ புதிய உலகில் நிற்கிறேன். பெருமையாய் பார்வையாளர்களை நோக்கி சுற்றிலும் கண்ணை பரவ விடுகிறேன். அதோ அங்கிருப்பது யார்.? மனம் துடிக்க பார்க்கிறேன், அவனேதான் என் முதுகில் பயணித்து அடிபட்ட ஜாக்கியான பயிற்சியாளன், முதலாளியிடம் என்னை சுட்டு கொன்று விடாமல் காப்பாற்றியவன்.
அவனை நோக்கி இரு கால்களை எடுத்து வைக்க முயற்சிக்கிறேன், சட்டென இரு கரம் என் கழுத்தை அணைத்து எங்கு போகிறாய்? வா, நிகழ்ச்சி முடிந்து விட்டது, என் பெயரை காப்பாற்றிவிட்டாய். கண்ணீருடன் சொன்னான். எனக்கு நடனம் கற்பித்து புகழையும் கொடுத்த பயிற்சியாளன்.
ஒரு கணம் யோசித்தேன். என் முன்னாள் பயிற்சியாளனும் ஜாக்கியுமான அவனது நினைவுகளை என் மனதுக்குள் பதுக்கி வைத்து விட்டு நடன பயிற்சியாளனான இவனை மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அவன் சொன்னபடி ஒயிலாய் நடந்து எனது இருப்பிடத்துக்கு செல்கிறேன்
நிகழ்ச்சி முடிந்து செல்பவர்கள் “இந்த சர்க்கஸிலேயே “குதிரை டான்ஸ்தான்” பிரமாதம், சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார்கள். இதை என்னுடைய பழைய ஜாக்கியும் கேட்டிருப்பான். பெருமைபட்டிருப்பான். அது போதும் மனதுக்குள் ஒரு அமைதி.

