ஓடிப் போகாதீங்க ......(ஒரு தாயின் குமுறல் )
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்டிக்காட்டு பொம்பள நான்
பாத்து பாத்து பூத்தேனே ....
பட்ட வலி மறக்குமே
பருவமக உன் சிரிப்புல
இப்ப
பட்டமரம் ஆயிபுட்டேன்
பாவி மக உன் நடப்புல ....
மொரட்டு மாப்பிள்ளையும்
மூத்தவள வெரட்டிபுட்டான்
மூணாவது தங்கச்சியும்
மூலையில ஒதுங்கிப் புட்டா ,
எப்படி நான் கர சேப்பேன்
ஏ..மாரியாத்தா வழிகாட்டு
ஏ மக மேல பட்ட கறைய
காலபோக்கில் நீ மாத்து..
பிடிவாதம் பிடுச்சிருந்தால்
பிடிச்சவனோட சேத் திருப்பேன்
புரியாம போயிட்டாயே..
ஏம் மனச புண்ணாக்கி
போயிட்டாயே....
உன்னபத்தி நினச்சயே
உடன்பிறப்ப நினைச்சயா?
நீ படிக்க பாடுபட்ட,அவ பாசவலி ,மறந்தயா ?
வாழ்வெல்லாம் கஷ்டப்பட்ட
அவளுக்கு இனி வாழ்க்கை கிடைக்குமா ?
உன் ஓடுகாலி தனத்துக்கு
ஏந் குடும்ப மொத்தம் இரையாகுமா?
உன்ன நினச்சு அழுவேனா ?
உன் சிறுச நினைச்சு அழுவேனா ?
ஏம் புள்ள
இப்படி செஞ்ச ...
என ஏமாத்தி தள்ளி நின்ன ...
தலையெல்லாம் வலிக்குதே
என் தலைஎழுத்து
வாழ்க்கையே தாறுமாறா கிடக்குதே ...
என் செல்ல மக அவ
சீரோட இருப்பாளோ ,சிரிப்போடு இருப்பாளோ ?
சின்னா பின்னமாகி சிதைஞ்சு தான் போவாளோ ...
தட்டிகேக்க ஆளு இல்லாம
தடுமாறி போவாளோ ?
நான் இல்லாம எம்புள்ள
நடுங்கித்தான் போவாளோ ?
மெத்த பிடுச்ச மாமியாரு
மகளாட்டம் நடத்துவாளோ ?
இல்ல ,
மேனியெல்லாம் வதங்க
வேல வெட்டி தருவாளோ ?
ஏ குலசாமி காப்பாத்து ...
என் குழந்தைய காப்பாத்து...
பக்கத்து வீட்டு வசந்தாக்கா
பலதடவ சொன்னாலே
நம்பாம இருந்தேனே ,
என் நம்பிக்கையில் மண்ணபோட்டா ..
ஒருதடவ சொல்லி இருந்தா
அவனப்பத்தி விசாரிச்சுருப்பேன் ...
இப்படி கண்டத எண்ணி
கவலைப்பட்டு கிடக்க மாட்டேன் ...
கொன்னு புட்டு போயிருந்தா
நிம்மதியா போயிருப்பேன் ,
கொத்துயிரும் கொளுயிருமா
கிடக்கவச்சு போயிட்டயே...
பிறக்கும் போது
தந்தது எல்லாம் வலியேஇல்ல
இப்ப நீ தந்த வலி அதவிட அதிகமடி
எல்லாத்தையும் சொல்ற மக
ஏண்டீ இத சொல்லல ,
இந்த அம்மா நினைப்பு
அப்ப உனக்கு எப்புடி புள்ள வரல ...
உன்ன ஒழுங்கா வளக்கலன்னு
ஊரு சனம் பேசுது ..
உன்னையும் என்னையும் பத்தி
கூசாம கூவுது ....
உன்ன தட்டி கேக்க முடியாம
பாசம் வந்து தடுக்குது ...
பசி பொறுக்காத பச்ச மக
சாப்பிட்டையோனு
நெஞ்சுக்குள்ள தவிக்குது ....
சமுதாயம் மாறலையே ....
சாதிசனம் மாறலையே ....
காதலுக்கு எதிரியில்ல
கலியாணத்த தடுப்பவயில்ல ...
நான் பாத்து
செஞ்சுவச்சா .,
நகநட்டு போட்டுருப்பேன் ....
நீ பாத்து செஞ்சுகிட்ட
என்னடி உனக்கு நான் செய்வேன் ?
ஓடி போகும் பிள்ளைகளே
ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,,
உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம்
மாத்துங்களேன் .....
உங்கள நல்ல படியா வளத்தவங்க
நம்பிக்கைய கொல்லாதீங்க.....
நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை
தருவாங்க ......
காசு பணம் போயிருந்தா
கஷ்டப்பட்டு சேத் திருப்பேன் ....
என் கன்னுகுட்டி
போயிடுச்சே ...
எங்க போய் நான் பாப்பேன் .....?