கடவுள் உறங்கும் சொகுசு மெத்தை.

நாகரீக மனிதன் செய்யும்
அநாகரீகம் கண்டு
மனம் குமுறிய பூமித்தாய்
வானத்தில் கட்டிய
கண்ணீர்க் கூடு.

நீரை உறிஞ்சிக் கொழுத்த
பயிரின் விலையை தன்
உயிரின் விலையிலும் மேலாய்
உயர்த்திய மனிதனுக்கு
நீரின் விலையை உணர்த்தும்
வான வியாபாரியின்
பதுக்கல் அறை.

பராமரிக்க
மறந்துபோன மனிதன்
நீர் பெற்றோர் ஆவியாகி
ஆகாயத்தில் சேர்ந்தபோது
அரவணைத்துக் கொண்ட
முதியோர் இல்லம்.

காற்றுக் காதலனை
கல்யாணம் செய்துகொண்டு
ஊர்கோலம் போகும்
புதுமணவாட்டி.

இயற்கைத்தாயின்
சுவரில்லாச் சித்திரங்கள் .

ஜலப் புலவன்
எழுதிய
மொழியில்லாக் கவிதை.

காதலர்கள்
தூதனுப்பும் காகிதம்.

கேட்பதற்கு ஆளில்லை என்று
எல்லைகள் தாண்டி
எல்லைகள் தேடி
தொல்லைகள் இன்றி
மனம்போன போக்கில்
திரியும் சுதந்திரப் பறவைகள் .

சூரிய தாத்தா
சுருட்டு குடித்தபோது
வெளிவிட்டப் புகையாகவும்
நட்ச்சத்திரத் தொழிற்சாலை
இயந்திரங்கள் வெளிவிட்டப்
புகையாகவும் இருக்கலாம்.,
ஆனால் பார்வைக்கு
கடவுள் உறங்கும்
சொகுசு மெத்தையாய் தெரிகிறது
இந்த மேகங்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Sep-13, 2:09 am)
பார்வை : 368

மேலே