ஒரு கூட்டினைத் தேடி

சிறியதொரு கூட்டினைத் தேடுகின்றேன்
குறைவற உண்டும் குடித்தும் உறங்கிட
கடவுளின் அருளும் ஆசீரும் இருப்பின்
நெடுநெடு என்று காலம் நீளாமல்
தங்கிடும் குடும்பம் மகிழ்வில் பொங்கிட
உடைமைகள் அடுக்கி அழகினைக் கூட்டி
செல்லப் பிராணியை சொல்லிக் கொஞ்சிட
கொல்லைப் புறமுடை முத்திழை சிற்றில்

சிற்றிளம் பச்சையில் செடிகளும் கொடிகளும்
சிணுங்கிச் சிரித்து சிற்றின்பம் களித்திட
தென்னை இரண்டுடன் புன்னை ஒன்றிருந்து
கண்ணிலே காற்றது வருவதைக் காட்டிட
நுண்ணிய இலைகளை நீடடியும் ஆட்டியும்
பண்ணுடன் எவரையும் பாடவும் செய்திடும்
தண்பனி நீரில் தோய்ந்த மல்லிகையாய்
விண்படும் திங்கள் தீண்டிடும் ஒளியுடன்

அருந்தினர் மீண்டும் அருந்திச் செல்லவும்
விருந்தினர் வரவினை நோக்கி இருக்கவும்
தானமும் கொடையும் தகைசால் நட்பும்
ஞானமும் அறிவும் குன்றா அமைப்பினில்
முன்னவர் எவர்க்கும் இதுவரை இலாத
தன்னிகர் உயர்ச்சியை தனதெனக் கொண்ட
வீடொன்று வேண்டும் நாடிதன் முனையில்
கூடிடும் கடல்களும் குலவிடும் வகையில்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (4-Sep-13, 10:37 am)
பார்வை : 90

மேலே