...எனப்படுவது யாதெனின் !

பொருளை உணர்த்தும் - ஆனால்
பொருளாய் நம் முன்னால் நிற்காது
மொத்தமாய் நனைக்கும் - ஆனால்
மழையாய் வந்து கொட்டித் தீர்த்திடாது
அலைகளைப் பரவவிடும் - ஆனால்
கடலைக் கண்ணிற்குக் காட்டாது
விருந்திற்கு அழைக்கும் -
மறந்தும் முகவரியை வழங்காது
பல சுவையைக் கொடுக்கும் -
படையலின் பெயர் சொல்லி விளக்காது
மணத்தால் உணர்த்தும் -
மலர் இனத்தை முன் மொழிந்திடாது
மலையாய் மலைக்கும் -
மலையென எதிரில் தோன்றாது
பயணத்தை சுகமாக்கும் -
ஆரம்பித்ததும் பாதையை முடிக்காது
வானம் சென்று களிப்பூட்டும் -
பற்ற வைத்ததும் வெடித்துச் சிதறாது
விரிவான செய்தியாய் வளரும் -
தலைப்புச் செய்தியைக்கூடச் சொல்லாது
மூழ்கியபின் முத்தைக் கொடுக்கும் _
சிப்பி போல் எங்கும் சிதறிக் கிடக்காது
உச்சத்தில் சொக்க வைக்கும் - ஆனால்
ஆரம்பித்ததுமே ஒரு புரிதலையும் தந்திடாது !
கவிதை !!