எங்கே தேடுவேன்?

எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?
இறைவன் கொடுத்த அற்புதக்
கொடையை--
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

அறிவாய் அமர்ந்து ஆட்சி செய்யுது,
அன்பாய் கனிந்து ஆனந்தமாகுது
அபிமானமாய் மனிதமாக்குது
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

அருவமாகவே ஆற்றல் படைக்குது.
இறைவனாகவே இயக்கமருளுது.
ஐந்தின் ஆளுமை அதுவே நடத்துது.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

எண்ணம் ஏவல் எல்லாம் அதுவே.
ஈவு இரக்கம் சொல்லும் அதுவே,
உண்மை ஊக்கம் உணர்வும் அதுவே.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஒழுகும் முறையும் ஓதும் நலமே.
பழகும் விதமும் பரிந்திடும் நலமே.
அழகும் ஆய்ந்து தேர்ந்திடும் நலமே.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஔவியம் அகற்றிட அதுவே உதவுது
பௌவியம் காத்திட பாதையும் காட்டுது.
திவ்வியம் மேம்பட செம்மையாக்குது
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

புத்தியும் சித்தியும் சத்தியமாக்குது,
சக்தியும் எனக்குள் உத்தமமாக்குது.
முக்திக்கு வழியும் முன்னே ஆக்குது.
எங்கே தேடுவேன் மனதை
எங்கே தேடுவேன்?

ஆன்மா அதுதான் நானெனச் சொல்லுது.
ஆழ்ந்தே உனக்குள் தேடெனச் சொல்லுது.
அங்கே அறிவாய் நானேநீயெனச் சொல்லுது.
என்னில் தேடுவேன் என்னை
நானே தேடுவேன்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (10-Sep-13, 12:05 pm)
பார்வை : 192

மேலே