வேடிக்கை மனிதர்கள்

சாலையின் இருபுறமும் விநாயகர் பல அவதாரங்களை காட்டி கொண்டிருந்தார். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் மதுரை மாநகரம் முழுவதும் விநாயகர் சிலைகள் அமோகமாக விற்று கொண்டிருந்தது. அஷ்வினும் ரேஷ்மியும் தங்கள் செல்ல மகன் வினோத்தை தூக்கி கொண்டு சாலையோர கடைகளை அலசி கொண்டிருந்தனர்.

சதுர்த்திக்கு நல்ல ஒரு சிலை வாங்குவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியிருந்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரம் ஆகியும் அவர்கள் எதிர்பார்த்த விலையிலும், தரத்திலும் சிலை கிடைக்க வில்லை. கொஞ்ச நேரத்திலேயே ஏதேனும் ஒரு சிலையை வாங்கி செல்வது என்று அஷ்வின் முடிவு செய்து விட்டான். விநாயகர் என்ன கோவிச்சுக்குவா போறாரு?. ஏதாவது ஒண்ண வாங்கிட்டு வா ரேஷ்மி என்றான். “சாமி காரியத்துக்கு வாங்குறோம். நல்லதா பார்த்து தானே வாங்க முடியும்” என்று அஷ்வினின் வாயை ரேஷ்மி அடைத்து விட்டாள்.

நேரம் செல்ல செல்ல அஷ்வின் ரொம்ப கடுப்பானான். வினோத்தும் மிகவும் சோர்வடைந்தான். பிறகு மூவரும் கடையில் கரும்பு சாரினை அருந்தி விட்டு தேடல் படலத்தை தொடர்ந்தனர். கரும்பு சாரு கடையில் இருந்து நான்கு கடை தள்ளியிருந்த கடையில் இருந்த ஒரு சிலையை எடுத்து ரேஷ்மி அஷ்வினிடம் காட்டினாள். ரொம்ப நல்லாயிருக்கு என்றான் அஷ்வின். அந்த நேரத்தில் புத்தர், இயேசு சிலைகளை ரேஷ்மி காட்டியிருந்தால் கூட நல்லாயிருக்கு என்று தான் சொல்லியிருப்பான் அஷ்வின்.

இருவருக்கும் அந்த சிலை பிடித்து போக கடைக்காரனிடம் விசாரித்தனர். அவன் 450 ரூபாய் என்றான். ரேஷ்மி 250 ரூபாய் என்று பேரம் பேச ஆரம்பித்தாள். 500 ரூபாய் கொடுத்தாவது இந்த சிலையை வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் அஷ்வின். கடைக்காரன் ரேஷ்மியிடம் இருந்த சிலையை பிடுங்கி கொண்டு கட்டுபிடி ஆகாதும்மா என்றான்.

“கடவுளுக்கும் பேரம் பேசும் வேடிக்கை மனிதர்கள் இன்னும் பூமியில் வாழ்கிறார்கள் தானே” என்று தனக்கு தானே கூறி கொண்டான் கடைக்காரன். இதை கேட்டதும் “கடவுளையும் வியாபாரம் ஆக்கி பணம் சம்பாதிக்கும் வேடிக்கை வியாபாரிகளும் இன்னும் பூமியில் வாழ்கிறார்கள் தானே” என்றான் அஷ்வின்.

இப்படியே விவாதம் தொடர இறுதியாக 350 ரூபாய் என்று பேசி முடித்து கொண்டனர். ரேஷ்மியும், கடைக்காரனும். இப்ப தான் அஷ்வினின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

அடுத்த நாள் மாலை வினோத் வேகமாக ஓடி வந்து அம்மா என்று கட்டி கொண்டான். செல்லம் ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டியா வேகமா போயி டிரஸை மாத்திட்டு சாமி கும்பிட்டு வா; அம்மா உனக்கு கொலுக்கட்டை, சுண்டல் எல்லாம் செய்து வச்சுருக்கேன் என்றாள்.

இதை எதையும் கண்டு கொள்ளாத வினோத் அம்மா நான் ஸ்கூல்’ல நடந்த மாறுவேட போட்டியில் ஜெயிச்சுட்டேன் அம்மா. முதல் பரிசு எனக்கு தாம்மா. நீ காலையில போட்டு விட்ட விநாயகர் வேஷம் தாம்மா. டீச்சர் என்னை ரொம்ப பாராட்டுனாங்க என்றான்.

‘அப்படியா தங்கம், ரொம்ப சந்தோஷம் டா. அப்பாகிட்ட சொல்லிட்டியா என்றாள். ம்ம்ம்.. சொல்லிட்டேனே’ என்றான் வினோத். ‘நாம கும்பிடுற சாமி தான் உனக்குள்ள இருந்து உன்னை ஜெயிக்க வச்சுருக்காரு வினோத்’ என்றாள் ரேஷ்மி.

என்னம்மா சொல்ற எனக்குள்ள சாமி இருக்காறா என்று குழந்தை மொழியில் கேட்டான் வினோத். ஆமாண்டா தங்கம். சாமி எல்லார்க்குள்ளயும் இருக்காரு என்றாள் ரேஷ்மி.

‘எனக்குள்ளயே சாமி இருக்காரு. அப்புறம் ஏம்மா வேற ஒரு சாமியை வாங்க ரோடு ரோடா நேத்து அலைஞ்ச’ என்றான் வினோத். ரேஷ்மிக்கு சாட்டையால் அடித்தது போல் இருந்தது. ரேஷ்மி சாமியறையில் இருந்த விநாயகர் சிலையை நோக்கினாள். அந்த சிலை அவளை பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல் உணர்ந்தாள்.

நாமளும் இந்த ரேஷ்மி மாதிரி தாங்க நமக்குள்ளயும் சக மனிதர்குள்ளேயும் இருக்குற கடவுளை உணராமல் கோவில், குளம்னு சுத்தி சுத்தி கடவுளை தேடிக்கிட்டு இருக்கோம்.

எழுதியவர் : ராம்குமார் (10-Sep-13, 8:22 pm)
பார்வை : 294

மேலே