விபத்து

அதிகாலை நேரம்,

சியாமளா அந்த மருத்துவமனையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். அடிக்கு ஒரு முறை நடந்ததை நினைத்தாள் அவள் அனுமதியின்றியே கண்ணீர் துளிர்த்தது,

காலை நேரம் என்பதால் மருத்துவமனையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.
அறையில் இருந்து மருத்துவர் விஜி வெளிப்பட்டாள். அவள் சியாமளாவின் தோழியும் கூட ,
"விஜி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் வேணும்னு பண்ணல டி " என்றாள் கண்ணிருடன் .
" நீ பயப்படாத சியாமளா நான் இருக்கேன் முடிஞ்சா வரையில் முயற்சி செய்றேன். உன் நல்ல மனசுக்கு எதும் ஆகாது. தைரியமா இரு. " என்று ஆறுதல் கூறி விட்டு " இன்னைக்கு டூட்டி டாக்டர் வேற லீவ் நான் தான் அவுட் பேசென்டையும் பாக்கணும். நீ கொஞ்சம் நேரம் உக்காரு நான் பாத்துட்டு வரேன். அப்பறம் அந்த ஆளுக்கு ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் வந்துடும் அதையும் பாத்துட்டு நாம ஒரு முடிவுக்கு வரலாம்" என்று சொல்லிவிட்டு அவள் பணியை பார்க்க புறப்பட்டு விட்டாள்.
ஆனால் சியாமளாவுக்கு தான் மனம் அமைதி கொள்ள வில்லை.
சியாமளா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிப்பவள். நல்ல அழகானவள் , சியாமளாவின் தந்தை சதாசிவம், ஊரில் நல்ல வசதி படைத்த மனிதர். சியாமளாவின் தாய் பர்வதம். அவர்களுக்கு சியாமளா தான் ஒரே மகள்.அவள் சந்தோசமே வாழ்வென வாழ்ந்து வந்த பெற்றோர் அவர்கள்.
சியாமளாவின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் எதுமே செய்தது கிடையாது.
சியாமளாவும் தன் தாய் தந்தையின் மனம் புண்படும்படி என்றும் நடந்ததில்லை. அவளை பொறுத்த மட்டில் வாழ்வின் எல்லா சுகங்களும் ஒரு சேர கிடைத்துவிட்டது.

சியாமளாவுக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். எல்லா கார் பந்தையங்களிலும் கலந்து கொள்வாள்.
அவளிடம் இருக்கும் இன்னோர் பண்பு அவளின் விளையாட்டு தனம் எதற்கும் கவலை இன்றி வாழும் அவளுக்கு இது பிறவி குணமாகவே இருந்தது

மருத்துவமனையில்,
விஜி தன் அறையில் அமர்ந்து அந்த மனிதனின்
ஸ்கேன் ரிப்போர்ட்-ஐ பார்த்துகொண்டிருந்தாள் எதிரே சியாமளா ," விஜி அந்த ஆள் பிழைப்பான விஜி " என்று பயத்துடன் கேட்டாள்.
விஜி அந்த காகிதங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒரு சலிப்புடன் சியாமளாவை ஏறிட்டாள்," கொஞ்சம் கஷ்டம் தான் சியாமளா அவருக்கு தலையில் அடிபட்டு இருக்கு" என்றாள்.
"என்ன விஜி சொல்ற அவருக்கு ரத்தமே வரலையே "-இது சியாமளா
"அது தான் இப்ப பிரச்சனையே பொதுவா தலையில் அடிப்பட்டால் உடனே ரத்தம் வந்திடனும் அப்டி வந்துட்டா கொஞ்சம் சிரமம் இல்லாம ட்ரீட்மென்ட்
கொடுக்கலாம் ஆனா அவருக்கு ப்லட் பிளாக் ஆயிடுச்சி அதாவது அந்த காயத்துலேயே ரத்தம் உறஞ்சிடிச்சி. சரி இந்த விபத்து எப்படி ஆனது சொல்லு சியாமளா " என்றாள் விஜி.
"....................." சியாமளாவிடம் மௌனம் மட்டுமே
" இதோ பாரு சியாமளா ஒரு விபத்து நடந்து ஒருவருக்கு சிகிச்சை கொடுக்கணும்னா காவல் துறையோட கவனத்திற்கு கொண்டுபோய் அவங்க விசாரிச்சா தான் முடியும். ஆனா நான் அப்டி பண்ணல நீ என் தோழி அதனால்தான் உடனே சிகிச்சை அளிக்க ஒத்துகிட்டேன். ஆனா நீ என்கிட்ட சொல்லவே தயங்குற சொல்லு சியாமளா என்ன நடந்தது. நீ சொல்றத வச்சி தான் மேற்கொண்டு என்ன செய்யலான்னு முடிவு பண்ணனும். சொல்லு சியாமளா " , என்று வற்புறுத்தினாள்.
சியாமளா மெல்ல நடந்தவற்றை கூறினாள்."விஜி காலைல நான் வழக்கம் போல நடைபயிற்சி எடுக்க பீச் போனேன். அங்க ரெண்டு பேர் என்ன பின்தொடர்ந்து வந்தாங்க நான் அவங்களுக்கு பயந்து வேகமா கார் ல ஏறிட்டேன். ஆனா அவங்க என்னை வெரட்டிட்டு வந்தாங்க நான் அவங்க மேல இருந்த பயத்துல வண்டிய வேகமா ஓட்டுனே அப்போ எதிர்பாரதவிதம இந்த விபத்து நடந்துடுச்சு எனக்கு என்ன பன்றதுனே தெரில்ல அதன் உடனே உனக்கு கால் பண்ணேன்" என்றாள் விசும்பலோடு .

"சரி நீ ஏன் அங்கிளுக்கு என்னும் விஷயத்த சொல்லாம இருக்க அவர்கிட்ட சொன்ன எதாவது ஸ்டேப் எடுத்து உன்ன இதுலேந்து காப்பாதுவாறே " என்றாள் விஜி

" இல்ல விஜி இது நான் செஞ்ச தவறு இதை நான் தான் சரி செய்யணும்" என்றாள் சியாமளா . "இதில் உன் தவறு ஒன்றும் இல்லை இது ஒரு விபத்து நீ தேவைல்லாம அலட்டிக்காத.சரி நீ வீட்டுக்கு போய் அங்கிள்ட்ட விசயத்த சொல்லு அவர் பாத்துபாறு " என்று கூறிவிட்டாள்,
சியாமளாவிற்கு அவள் கூறியதன் அர்த்தம் புரியாமல் இல்லை தன் தந்தையிடம் சொன்னால் அடிபட்ட மனிதரின் மருத்துவ செலவை தானே ஏற்று கொள்வார் ஏன் அவர் இறந்தால்கூட அதற்கான நஷ்ட ஈடாக எதாவது கொடுத்துவிடுவார் (வேறென்ன பணம் தான் )

ஆனால் சியாமளாவின் மனம் அதனால் அமைதி பெறாது ஒரு மனிதரின் உயிரை வெறும் காகிதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பவள் இல்லை அவள் ஏனோ சியாமளாவிற்கு அந்த மனிதரின் விபரங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது

எப்படி தெரிந்துக்கொள்வது ?, தந்தையிடம் கூறலாமா வேண்டாமா என்ற சிந்தனையுடனே வீட்டிருக்கு வந்தாள்.
எதிரே சியாமளாவின் அம்மா " என்ன சியமா காலங்கதால போன பொண்ணு இப்ப வர எங்க போயிருந்த இவ்ளோ நேரம் " என்று வினவினாள்.
சியாமளாவிற்கு நடந்ததை கூறிவிடலாமா என்றுகூட தோன்றியது ஆனால் ஏனோ கார் பிரேக் டோவ்ன் என்று பொய் சொன்னாள். அம்மாவிற்கு தெரிந்தால் பிறகு வெளியில் அனுப்பவே யோசிப்பார், பயப்படுவார் என்றெல்லாம் நிறைய காரணங்கள் இருக்கிறது.

சியாமளா பின் குளித்து முடித்து , டைன்னிங் டேபிள் வந்தாள் அவள் தந்தை அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். இவளும் சேர்த்து சாப்பிட்டாள். தந்தையிடம் கூறலாமா வேண்டாமா மன போராட்டம் தான் சொல்லலாம் என முடிவெடுத்து வாயெடுத்தால், தொலைபேசி அழைக்கவே அவர் அதனுடன் உறவாட சென்றுவிட்டார்.
அதற்கு மேல் அவள் அங்கு இருக்கவில்லை . மருத்துவமனை நோக்கி ஓடினாள்.ஒரு முடிவு எடுத்தவளாக........

மருத்துவமனையில் அந்த மனிதர் இறந்துவிட்டார் என்ற செய்தியே சியாமளாவிற்கு காத்திருந்தது. நேரே விஜியிடம் சென்று,"என்னாச்சு விஜி? எப்படி ?" என்றெல்லாம் கேள்விகள் அவளிடம் .

விஜயோ," சாரி சியாமளா நான் எவ்ளவோ ட்ரை பண்ணேன் பட் இப்படி ஆயிடுச்சு" என்று மருத்துவருக்கே உண்டான பாணியில் கூறிவிட்டாள்.

இருந்தும் சியாமளா தான் எடுத்த முடிவை அரங்கேற்றவே எண்ணினால் அதை விஜியிடம் கூறியபோது ,,,,,,,,,,,,,,
"ஐயோ வேண்டாம் சியாமளா நீயோ கல்யாணம் ஆகவேண்டிய பெண் உன் குடும்பமோ ஊரிலே மிக வசதியான குடும்பம், நீ இப்படி செஞ்சா உன் குடும்ப மனமே போய்டும் . நீ இத அங்கிள்ட்ட விட்டுடு அவர் பாத்துபாரு சொன்ன கேளு சியாமளா என்று கெஞ்சினாள் ".
ஆனால் சியாமளாவோ அவள் முடிவில் உறுதியா இருந்தாள். அதற்கு மேல் அவளை விஜி வற்புறுத்தவில்லை அவள் விருப்பம் என்றே விட்டுவிட்டாள்.

மாலை மணி 5.30

இதுவரையில் தன் வாழ்வில் பயணிக்காத ஒரு பாதையில் சியாமளா சென்று கொண்டிருந்தாள் அவள் அருகில் அவள் தோழி விஜி,

"சியாமளா நீ செய்ய போற காரியம் எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு அவங்கலாம் எப்படி இருப்பங்களோ என்னவோ நல்ல யோசிச்சி தான் இந்த முடிவுக்கு வந்தியா", என்றாள் விஜி .

"விஜி நான் நல்ல யோசிச்சிட்டேன் நான் செஞ்ச தப்ப என் அப்பாகிட்ட சொல்லி மறைக்கிறதவிட என்னால பாதிக்க பட்ட அந்த குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட சொல்லி மன்னிப்பு கேட்க போறேன் அவங்களுக்கு மனம் இருந்தா என்ன மன்னிக்கட்டும் இல்லைனா அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் ". என்றாள் துணிவுடன் தவறை மறைக்க நினைத்தபோது இருந்த நடுக்க அதை ஒத்துக்கொண்டு தண்டனை பெற தயாரான போது துளியும் இல்லை. என்ன ஒரு மன அமைதி அதனாலே ,

சியாமளா வழியில் சிலரிடம் விலாசம் கேட்டு கொண்டு ஒரு வாராக கைலாசத்தின் வீடு வந்து சேர்ந்தாள். கைலாசம் , ஆம் அவர் தான் சியமாவின் கார்-க்கு பலியானவர். ஆனாலும் நல்ல மனிதர்போலும் அவரின் விலாசத்தை தேடும் சிரமம்கூட அவர் சியாமளாவிற்கு வைக்கவில்லை.

அவர் யார் என்று குழம்பிய சியாமளாவிற்கு அவரின் பாக்கெட்டில் இருந்த மணிபர்சே விடை சொன்னது. அதில் பணம் இல்லை ஆனால் கைலாசத்தின் மனம் தெரிந்தது
அதில் அவர் வைத்திருந்தது வாக்காளர் அடையாளர் அட்டை, உடல் உறுப்பு தானம் செய்வதற்க்கான டோனர் கார்டு முதலிய ஒரு நல்ல குடிமகனுக்கு தேவையான அம்சங்கள் அதிலிருந்து அவரின் விலாசம் கண்டுபிடித்து வந்து சேர்ந்தாள் சியாமளா

வீட்டை கண்டதும் அவளுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி இந்த மனம் நாம் எவ்வளவோ தான் அதை சமாதானம் செய்தாலும் அது அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கும் போல .......

சியாமளா இப்போது தனக்குள் ஒரு புது தைரியத்தை வர வழைத்து கொண்டு கதவை தட்டினாள். 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி கதவை திறந்தாள்.

சியாமளாவை யார் என்று வினாவினாள்." நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அம்மா ", என்றாள் நா தழுதழுத்தது .

அவள் சியாமளாவை உள்ளே அழைத்து சென்றாள். சியாமளா யார் என்ன என்று (சியமாவின் சுய விபரம்)
கேட்டுவிட்டு " இந்த மனுஷன் எங்கு போனறேன்றே தெரியவில்லை உனக்கு காபி போடலாம் என்றாள் வீட்டில் பால் இல்லை ", என்றாள். அதை கேட்ட சியாமளாவிற்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை வெடித்து அழுதுவிட்டாள் விஜி சமாதனாம் செய்ய முற்ப்பட்டால் ஆனால்' வேண்டாம் என்று இருந்துவிட்டாள் அவளுக்கும் அந்த வார்த்தைகள் ஏதோ செய்தது போலும் .........

திடீரென சியாமளா அழுதது ஏன் என்று அந்த பெண்மணி திகைத்து நின்றாள். அவளிடம் "ஏனம்மா அழற ஏன் அழற " என்று வினா தான் வந்தது ,
சியாமளா தன் அழுகையோடு நடந்த யாவற்றையும் கூறினாள் "தங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் என்று கொண்வேனம்மா", என்று கதறினாள்.

ஆனால் அந்த பெண்மணி எதும் கூறாமல் கல்போல இருந்தாள். அவளின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற பயம் விஜி மனதில் அவள் காவல் துறையின் அனுமதி இன்றி சிகிச்சை அளித்திருக்கிறாள் அதனால் தான் பயம் .

அந்த பெண்மணியோ," என் கணவரை நான் பார்க்கவேண்டும் ", என்று மட்டும் கூறினாள். அவள் காலடியில் முகம் புதைத்து அழுகொண்டிருந்த சியாமளாவிற்கு அதிர்ச்சி, தவறு செய்தவள் நான் இருக்கிறேன் என்னை ஒரு சொல்கூட ஏசாமல் தன் கணவரின் உடலை காண நினைக்கும் அந்த பெண்ணின் உணர்வுகளை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மூவருமாக மருத்துவமனை சென்றனர். அந்த பெண்மணி தன் கணவரின் உடலை கண்டு அழுதுகொண்டிருந்தார். இதற்கிடையில் விஜி ஒரு வேலை செய்தால் சியாமளாவின் அப்பாவிற்கு போன் செய்து எல்லா விபரதையும் சொல்லிவிட்டாள்,

சியாமளாவின் தாயும் தந்தையும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.தன் தாயையும் தந்தையையும் அங்கு எதிர்ப்பார்க்காத சியாமளா விஜியிடம் கடிந்து கொண்டாள்.


சியாமளாவின் பெற்றோர் பயத்துடனே இருந்தனர் அந்த பெண்மணி என்ன முடிவு எடுப்பாளோ அது எந்தவிதம் தன் பெண்ணின் வாழ்வை பாதிக்குமோ என்றெல்லாம் எண்ணினார்


அந்த இடமே அந்த பெண்மணியின் ஒரு சொல்லிற்காக காத்திருந்தது சியாமளாவின் தந்தை அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர காத்திருந்தார்

அந்த பெண் விஜியிடம் வந்து " என் கணவர் உடல் தானம் செய்தவர் அவரின் உடலில் எந்த எந்த உறுப்புகளை எடுத்துகொள்ள முடியுமே எடுத்துகொள்ளுங்கள் மேலும் அவரது உடலை மருத்துவ படிப்பிற்கான ஆய்விற்கு பயன்படுத்திகொள்ளுங்கள்", என்று கூறிவிட்டாள்.

அதுவரை பயப்பட்ட விஜி அந்த தாயின் மனம் கண்டு கண்ணீர் சிந்தினாள்.

அந்த பெண்மணி சியாமளாவிடம் வந்து " மகளே இந்த உலகில் பிறந்த உயிர் அனைத்தும் இறந்தே ஆக வேண்டும் இருப்பினும் உன் கற்பை காக்க நீ செய்தது கொலை இல்லை அது விபத்து நீ நினைத்திருந்தால் அதை மறைத்து இருந்திருக்கலாம் ஆனால் உன் நல்ல மனம் அதை செய்யவில்லை. என் கணவர் பிற உயிர்களை மதிப்பவர் இன்று பல உயிர்க்கு அவர் வாழ்வளிதுள்ளர் அவர் ஒரு சிரஞ்சீவி "என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள் ஒவ்வொரு அடியிலும் கண்ணீரை சுமந்து கொண்டு ............


சியாமளா அந்த பெண்மணியை பார்த்தபடியே நின்றாள்.
அந்த மருத்துவமனை எதிரே உள்ள பள்ளியில் சுவர் எழுத்துக்கள்
"கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
சுட்டாலும் சங்கு வெண்மைதரும் "

எழுதியவர் : நிலா மகள் (11-Sep-13, 12:47 pm)
Tanglish : vibathu
பார்வை : 1930

மேலே