இரவொன்றும் விசித்திரமல்ல ......!(தூக்கம் குடிக்கும் துக்கங்கள் )
இந்த இரவானது
எதன் வலிகளை சுமந்ததோ
இன்னும் அழுது தீரவில்லை
பிறிதொரு காரணமே
ஓயும்வரை காத்திருப்பாய்
கண்ணயரக்
கொள்முதல் செய்யப்படும்
கனவுகளே கனியக்கூடாதா
வந்தவழி தேடிக் கொள்ளாதீர்
உயரழுத்தக் கோட்பாடு பேணாதீர்
சில மொட்டுக்கள்
கருகும் வாசனையோ
நுரையீரல் நிரப்பி வரும்வழியில்
மூச்சுத் திணறி நிற்க
முட்டி மோதியது மூளைக் கூச்சல்
கொட்டாவிக் கதவுகளும்
அவ்வப்போது திறந்துகொள்ள
அத்துமீறி நுழையவே
மிரட்சியில் வெறிக்கிறது
ஒற்றைக்கால் சயனம்
ஒருவரியிலும்
விவரிக்க இயலா துக்கங்கள்
தூக்கலாகவே சமைக்கப்பட்டதில்
அதன் ருசி எனையறியாதும்
நினைவின் நுனி ஒட்டிக்கொண்டது
கழிக்கப்பட்ட நாட்களோடு
ஏற்பட்ட கணக்குகள்
கூடுதலாகவே தம்மை
பெருக்கிக் காட்டுவதின்
வழிகளை வகுத்துக்கொண்டன
சுமைதாங்கும் கற்களாய்
இமைக் கற்றைகள் தூக்கி நிறுத்தி ,
மனப் பாரங்களே ! சுகமாய்
ஓய்வெடுக்க விழையாதீர்
போதும் இதுவே பிழை கொள்ளாதீர்
இதுவரை குடிக்கப்பட்டு
உடைந்த துக்க பாட்டில்கள்
கீறிய காயக் கிழிவுகள்
சுமக்கும் குப்பை மனமே
இரவொன்றும் விசித்திரமல்ல ....!