தாகம்…
ஒய்யாரச் சீமையிலே
ஓயாத மந்தையிலே
தாகத்தின் சாரல்!!
தன்னந்தனி காட்டுவழி
தேன்சொட்டும் தும்பைச்செடி
தேடலில் சிறகுகள்!!
வானம்பார்த்த பூமீயிலே
வாழத்தவிக்கும் கூரையிலே
தொப்புள்கொடியில் ஆதியிட்டு
தொடங்கிவிட்ட தாகம்!!
அனாதைக் காகிதமாய்
சிதைந்துவிட்ட கந்தைகள்
கலிக்கு விடைதருமா
கதியுள்ள முதலைகளும்!!
உருகாத மேகங்கள்
உணர்விழந்த உடன்பிறப்புகள்
உள்ளக் காய்ச்சலிலே
உள்ளூர அழுகின்றேன்!!
பஞ்சந் தெளியுமின்னு
பால்வெள்ளம் பாயுமின்னு
காத்திருந்து வருசம்போச்சு
தணியாத தாகமாச்சு
பட்டப்படிப்பு முடிச்சு
பைத்தியமா திரிகையிலே
அகலக்கால் பதிச்சா
அழிவு வாருமின்னு
ஆழக்கால் பதிச்சு
ஆத்துநீர் பாய்ச்சி
வெள்ளாமை தாகந்தீர்த்தேன்
அடவெவரங்கெட்ட மனுசனின்னு
அடிவேரும் சொன்னதம்மா….
ஆத்துநீர் எங்கே?
அடிப்பட்ட நாத்தெங்கே?
கருகி நாளாச்சு
கருவாச்சி வயக்காட்டில்
படுத்த படுக்கையிலும்
பதினாறு போலிருக்கு
பாழாப்போன மனசுக்கு!
நம்தாகந் தீரலையே
உனைத் தவிக்கவிட்டு போறேனே….!!
பஞ்சந் தெளியுமின்னு
பால்வெள்ளம் பாயுமின்னு
காத்திருந்து வருசம்போச்சு
எட்டாத கனியாச்சு!!
மாயவனின் மந்திரத்தில்
ஓர்தொடர்கதை-”தாகம்”..!!!