ஒன்ஸ்மோர்

இரவு எட்டு மணி இருக்கும். சாரல் காலம். குற்றாலத்தில் தூறல் பொசு பொசு என்று தூறிக்கொண்டிருந்தது. நண்பர்கள் சிலருக்கு தனிப்பாடல்கள் சிலவற்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தார்கள் டி.கே.சி. அவர் வீட்டு வாசலில் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து பெரியார் ராமசாமி நாயக்கர் இறங்கி வீட்டினுள் மளமளவென்று வந்தார். டி.கே.சி அவரை வரவேற்று உபசரித்தார்கள்.

தனிப்பாடல்கள் இரண்டை விளக்கிவிட்டு, திருக்குறளில் இருந்து இரண்டு பாடல்களுக்கும் விளக்கம் தந்தார்கள் டி.கே.சி., ராமசாமி நாயக்கருக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

""உங்களைப் போல ஒருவரும் சொல்லமாட்டேன் என்கிறார்களே... நானும் பெரிய பெரிய புலவர்களிடமெல்லாம் குறளைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறளைச் சொல்லும்பொழுது அப்படியே அதன் கருத்து விளங்கிவிடுகிறது. அப்படி இருந்தும் ஏன் குறளை ஜனங்கள் அனுபவிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்று புரியவில்லை'' என்றார் பெரியார்.

உடனே டி.கே.சி சொன்னார்:

""உங்களுக்கு விளங்குகிறது. நீங்கள் ஒரு லட்சியத்தில் நின்று உழைக்கிறீர்கள். உண்மையோடு உழைக்கிறீர்கள் அதனால் விளங்குகிறது. குறள் புரியவேண்டுமானால் இதயத்தில் உண்மை இருக்கவேண்டும். அது லட்சிய வடிவம் பெற்றுச் செயல்பட வேண்டும். தங்களிடம் உண்மை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. செயல்வேகம் இருக்கிறது நம்ம பயல்களுக்கு கம்பராமாயணமே விளங்கவில்லையே? பிறகு குறள் எப்படி விளங்கும்! ராமாயணத்தில் கதை இருக்கிறது. அது எளிதில் விளங்கக் கூடியது. அதுவே புரியவில்லை நம்மவர்க்கு. பிறகு குறள் புரியுமா? பெரும்பாலானோர்க்கு தந்திரம், பித்தலாட்டம், வஞ்சகம் இவைதானே இருக்கின்றன. ஒருவரிடமும் உண்மையோ, உழைப்போ இல்லையே?'' என்றார் டி.கே.சி. இதைக் கேட்டு பெரியார் அசந்து போனார்!

கம்பராமாயணம் என்றால் நாயக்கருக்கு வேப்பங்காய், அதைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று படை திரட்டியவர் நாயக்கர். அவரிடமே நேருக்கு நேராக, ""கம்பரே விளங்கவில்லை என்றால் குறள் எப்படி விளங்கும்?'' என்று கேட்கிறார் டி.கே.சி! யாதொரு களங்கமும் இல்லாமல் கேட்கிறார் டி.கே.சி.

டி.கே.சியிடம் இப்படி ஓர் உணர்ச்சி. கள்ளம் கபடம் இல்லாத தூய உண்மை உணர்ச்சி இருந்ததனால்தான் டி.கே.சியின் சஷ்டியப்த பூர்த்தி விழா இலஞ்சிக் குமாரர் கோயிலில் நடைபெற்றாலும் அதில் கலந்து கொண்டார் ராமசாமி நாயக்கர்.

நாயக்கரின் தொண்டர்குழாம், ""முருகன் கோவிலில் வைத்து நடைபெறும் விழாவுக்கு நாம் ஏன் போகவேண்டும்?'' என்று அவரைத் தடுத்துப் பார்த்தது.

""அறுபதாம் கல்யாணம் முதலியாருக்குதானேப்பா நடக்கிறது. முருகனுக்கா நடக்கிறது?'' என்று தொண்டர்குழாத்துக்குச் சமாதானம் சொல்லிவிட்டு முருகப் பெருமான் சன்னதிக்கே வந்துவிட்டார் நாயக்கர்!

("தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.' என்ற நூலில் தி.சுபாஷிணி)

எழுதியவர் : தி.சுபாஷிணி (20-Sep-13, 1:59 pm)
பார்வை : 107

மேலே