நமக்கும் தெரிந்த முகங்கள்..! -சிறுகதை- பொள்ளாச்சி அபி.!

தொழிலதிபர் இராமகிருஷ்ணன்,உங்கள் வங்கிக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார் என்று,அவரது செக்ரெட்டரி தொலைபேசியில் தகவல் சொன்னதிலிருந்து,வங்கியில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இராமகிருஷ்ணன்,இந்த நகரத்தில் இயங்கும் பல பெரிய தொழிற்சாலைகளுக்கும்,சில வணிகவளாகங்களுக்கும் உரிமையாளர். இதுமட்டுமின்றி,அவரது சொந்த ஊரில் பலஆயிரம் ஏக்கரில் நெல்லும்,கரும்பும் விளைந்து பணமாகக் கொட்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.அடுத்த வருடதுவக்கத்தில்,ஆர்.கே.பிலிம்ஸ் என்ற பல சினிமாக்களை ஒரே நேரத்தில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் சில பத்திரிகைகளில்கூட செய்தி வந்திருந்தது.

வேறு சில பத்திரிகைகளிலோ,ஐம்பது வயதான இராமகிருஷ்ணன்,இளம்வயது முன்னனி நடிகைகள் சிலருடன் உலக நாடுகளுக்கு அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வதாகவும் கிசுகிசுக்கள் எழுதுமளவிற்கு அவர் பிரபலமாகவும் இருப்பவர். பற்றாக்குறைக்கு ஆளுங்கட்சி வேறு அடிக்கடி அவரது ஆதரவைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. நினைத்தவுடன் அவரை யாரும் பார்த்துவிட முடியாது.எந்த நேரத்தில் எங்கேயிருக்கிறார் என்றுகூட சொல்லமுடியாத அளவில் அவர் எப்போதும் பிஸியோ பிஸி.

இப்போது அவரே தமது வங்கியைத் தேடி வருகிறார் எனில்..,வங்கி மேலாளர் சபேசனுக்கு பரவசமாயிருந்தது.

சரியாக பதினொரு மணிக்கு,இராமகிருஷ்ணனின் கார்,அந்த வங்கியின் பிரதான வாயிலில் நுழைந்தது.வெள்ளைச் சீருடையிலிருந்த கார் ஓட்டுனர் வேகமாக இறங்கி,காரின் இடது புறத்திற்கு ஓடி,பின் கதவைத் திறக்க.., ஆஜானுபாகுவாய்,ஆறடி உயரத்திலிருந்த இராமகிருஷ்ணன் காரிலிருந்து அமர்த்தலாக இறங்கினார். அமெரிக்காவில் தைக்கப்பட்ட வெளிர்நீல வண்ண கோட்டும்,சூட்டும் அவரது உடலை அலங்கரித்திருந்தது.அதற்கேற்ற வண்ணத்தில்,கழுத்தில் கட்டப்பட்டிருந்த டையும் மின்னிக் கொண்டிருந்தது.

வங்கியின் படிகளை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார்.அதற்குள் மேலாளர் சபேசன்,தனது அலுவலர்கள் புடை சூழ,ஓடிவந்து எதிர் கொண்டார். “குட்மார்னிங் சார்.”., தொடர்ந்து சபேசனின் பின்னால் நின்றவர்களின் கோரஸ{ம் ஒலித்தது.

லேசான ஒரு புன்சிரிப்புடன் அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட இராமகிருஷ்ணன், “அப்புறம் சபேசன்..,எப்படியிருக்கீங்க..? என்னைப் பாக்கணும்னு பலமுறை கேட்டதா என் செக்ரட்டரி சொன்னா..”

“ஆமா சார்,உங்களுக்கு ஏதாவது தொந்தரவாயிருந்திருந்தா மன்னிச்சுக்குங்க சார்..”

“ஓ..நோ..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே..,நீங்க எனக்கு நண்பராச்சே..!” சபேசனுக்கு உச்சி முதல் பாதம் வரை குளிர்ந்தது.அசட்டுப் புன்னகையோடு.. “தேங்க் யூ சார்..தேங்க் யூ சார் என்று வழிந்தார்.அவர்கள் பேசிக் கொண்டே நடந்ததில்,சபேசனின் அறை வந்திருந்தது.வெகு சுவாதீனமாக உள்ளே நுழைந்த இராமகிருஷ்ணன்,அங்கு புதிதாகக் கொண்டுவந்து போடப்பட்ட வி.ஐ.பி.சோபாவில். தனது உடலைப் பரப்பிக் கொண்டு,ரிலாக்ஸாக அமர்ந்தார்.

சபேசன் உட்பட பின்னாலேயே நுழைந்த அலுவலர்கள், ஒரு ஓரமாய் அணிவகுத்து நின்று கொண்டார்கள்.“சபேசன், ப்ளீஸ்..உங்க சீட்டுலே போய் உக்காருங்க..” என்று சிரித்துக் கொண்டே,மேலாளர் பதவிக்குரிய இருக்கையை,இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்ட, “பரவாயில்லே சார்.நான் இப்படியே நிக்கறேன்.” என்றபடி இன்னும் பவ்யம் காட்டினார்.

அதே சமயத்தில்,கைகளில் பலவிதமான பார்சல்களுடன் உள்ளே நுழைந்த பணியாளர்களிடமிருந்து,பார்சல்களைப் பிடுங்கிய சபேசன் மற்றும் உதவி மேலாளர் சேதுமாதவன் ஆகியோர் அதனை அவசரமாகப் பிரித்தனர். இராமகிருஷ்ணனுக்கு முன்பாக,போடப்பட்டு இருந்த டீப்பாயில்,உயர்ந்த வகை நெய்யில் செய்த இனிப்புகள்,காரம்,பிஸ்கட்டுகள் என வண்ணப் பீங்கான் தட்டுகளில் பரப்பி வைத்தனர்.

“ஹலோ..ஜென்டில்மேன்..எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்..?” இராமகிருஷ்ணன் குரலில் சங்கோஜம் ததும்பியது.

“பரவாயில்லே சாப்பிடுங்க சார்..எங்க வங்கிப்பக்கமே வராதவர் நீங்கள்..எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்திருக்கிறீங்க..,அதுக்காக நாங்க இதுகூட செய்யலேன்னா எப்படிங்க சார்..?”

“ஹஹ்ஹஹா..ஹஹ்ஹஹா..சபேசன் என்னையொன்னும் நீங்க கிண்டல் பண்ணலையே..?” ஏதோ மிகப் பெரிய நகைச்சுவையை சொல்லிவிட்டவர் போல,பெருங்குரலெடுத்து இராமகிருஷ்ணன் சிரிக்க.., சபேசனுக்கு சர்வாங்கமும் நடுங்கிப் போனது..பதறினார்.., “சார்..சார்..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே சார்..,நீங்க தப்பா எதுவும் நினைச்சுகிடாதீங்க சார்..மன்னிச்சுக்குங்க சார்” அவர் குரலில்,உடனே தனக்கு மன்னிப்பு வழங்கியே தீரவேண்டும் என்பது போல பதட்டமும்,வேண்டுகோளும் போட்டிபோட்டன.

மற்றவர்களும் ஏறக்குறைய சபேசனின் உணர்வுகளையே பிரதிபலித்துக் கொண்டிருந்தனர்.இராமகிருஷ்ணன்,திண்பண்டங்களை நாசூக்காக கொறிக்கத் துவங்கினார்.சபையில் இப்போது அமைதி நிலவியது.

அந்த நேரத்தில்,மற்றொரு அலுவலர்,சபேசனை நெருங்கி,ஏதோ ரகசியம் சொல்ல,. “எக்ஸ்கியூஸ்மி சார்,நான் இப்போ வந்துடுறேன்..,” என்று இராமகிருஷ்ணனிடம் அனுமதி கேட்க,அவர் ஓகே.ஓகே...கேரி ஆன்..”என்று பெருந்தன்மை காட்டினார்.

வேகமாக அந்த அறையைவிட்டு வெளியே வந்த சபேசன்,மற்றொரு அறைக்குள் நுழைந்தார். நாட்பபட்ட வாராக்கடன்களை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த தனியார் ஏஜென்சியின் இரண்டு நபர்கள்,இருபுறமும் நின்று கொண்டிருக்க,நடுவில் பரட்டைத் தலையும், அழுக்கு லுங்கியும்,போட்டிருந்த சட்டையில், இரண்டு மேல் பொத்தானில்லாமல் திறந்து கிடந்த மார்பில் மேலிருந்து,கீழாகக் கிழிக்கப்பட்டு தைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சை தழும்பு தெரிய, அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான்.

கதவைத் திறந்தவுடன் நேர்பார்வையில் பட்ட,அவனைப் பார்த்தவுடன் சபேசனுக்கு, கடுமையான ஆத்திரம் பொங்கியது.அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் சபேசன், “ஏன்யா..என்னய்யா நெனச்சுகிட்டே…லோன் வாங்கும்போது,தவறாம தவணையைக் கட்டிர்றேன்,தலையை அடமானமா வெச்சாவது கட்டிர்றேன்னு சொன்னே..,இப்ப தலைமறைவாத் திரியுறியா..? வீடு மாத்திப் போயிட்டா உன்னை கண்டுபுடிக்க முடியாதாய்யா..? ஒழுங்கு மரியாதையா இன்னும் ஒரு வாரத்திலே வட்டியோட அசலை செட்டில் பண்ணு..இல்லைனா,இதோ இப்ப வந்தாங்களே இவங்க வரமாட்டாங்க,இனி போலீஸ்தான் வரும்..ஜாக்கிரதை..,!” என்ற கத்தியபடியே, “இந்தக் கடங்கார நாய்களோட ஒரே தொந்தரவாப் போச்சு.., என்று தனக்குளளும் முனகிக் கொண்டே,அவர் கண்களைக் காட்ட,ஏஜென்சி ஆட்களில் ஒருவன் தன் கையிலிருந்த பைலைத் திறந்து,சில பேப்பர்களை எடுத்தான்.தொகையைக் கட்டாவிடில் சட்டப்படி கோர்ட் நடவடிக்கைக்கு உட்படுவதாக சம்மதித்து தான் கையெழுத்து போடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்தத் தாளில்,தயாராக ஒட்ட வைக்கப்பட்டிருந்த ரெவின்யூ ஸ்டாம்ப் மீது அந்த மனிதன்,சு..ட..லை..மு..த்..து.. என்று கையெழுத்தைப் போட்டான்.எதற்கும் இருக்கட்டும் என்று அவனது இடது கை கட்டைவிரல் ரேகையும் பதித்துக் கொள்ளப்பட்டது.

‘இப்போது என்ன செய்வது..?’என்று மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்த அவனை,சரி..சரி..போ..நான் சொன்னதெல்லாம் நெனப்புலே இருக்கட்டும்..,” என்று எச்சரித்தபடியே,அவனை வங்கி வாசலில் கொண்டு போய் விட்டனர்.அவன் மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்து,வெளியேறினான்.

தனியார் ஏஜென்சி ஆட்கள்,அந்த மனிதனைத் தேடிக் கண்டுபிடித்து,வங்கிக்கு கொண்டுவந்த வகையில் ஏற்பட்ட செலவுக்கான,தொகை எழுதப்பட்டிருந்த இன்னொரு தாளில் தனது கையெழுத்தைப் போட்டு,ஏஜென்சி ஆட்களிடம் கொடுத்த சபேசன்,அடுத்த நொடியே..டாய்லெட்டை நோக்கி ஓடினார்.அங்கிருந்த கண்ணாடியில், ‘தன்னிடம்,கோபத்தின் சாயல் ஏதேனும் இன்னும் தெரிகிறதா..?’ என்று தனது முகத்தைப் பார்த்து சில விநாடிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். கைக்குட்டையை எடுத்து மெதவாக முகத்தில் ஒற்றியபடி, 'ஹூம்..நல்லவேளை.அவர் பயந்ததுபோல ‘அப்படியொன்றும் சாயல் தெரியவில்லை’ என்பதில் நிம்மதி அடைந்தார்.டாய்லெட்டிலிருந்து வெளியேறி தனது அறையை நோக்கி வேகமாக வந்தவருக்கு,திடீரென நினைவில் பொறி தட்டியது.‘அப்போது கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த போது,கோபத்தின் சாயல் தெரியவில்லை. ஆனால்..ஏதோவொரு பிச்சைக்காரன் சாயல் தெரிந்ததோ..?. ஊஹும் ..இப்போது அதனை யெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க நேரமில்லை.., இராமகிருஷ்ணன் காத்திருப்பார்....’ நடையை எட்டிப் போட்டு,தனது அறைக்குள் நுழைந்தார் சபேசன்.

காபியைக் குடித்துக் கொண்டிருந்த இராம கிருஷ்ணன், உள்ளே நழைந்து ஓரமாய் நின்ற சபேசனைப் பார்த்தார். “என்ன சபேசன்..? அப்புறம் சொல்லுங்க..நான் உங்களுக்கு என்ன பண்ணனும்..?” காபிக் கோப்பையை கீழே வைத்தபடியே கேட்டார்.

“சார்..அது வந்து..”சபேசன் வெகுவாகத் தயங்கினார்.

“எதுவா இருந்தாலும் பரவாயில்லே சொல்லுங்க சபேசன்.., அவர் உற்சாக மூட்டினார். அதனால் சற்று தையரியமுற்று,தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சபேசன்., “சார்..எப்படியாவது இந்த மார்ச் முடியறதுக்குள்ளேயாவது.., பிரின்ஸிபல் கூட மெதுவாக் கட்டுங்க சார்,ட்யூ பேலன்ஸா நிக்குற, அந்த ஆறு கோடி ரூபாயைக் கொடுத்திருங்க சார்.., இல்லேன்னா ஹெட் ஆபீஸ் மூலமா எனக்குத்தான் பலவிதத்திலேயும் சிக்கல் வந்து சேரும் சார். நீங்கதான் எப்படியாவது மனசு வெக்கணும்..”, குளிரூட்டப்பட்ட அந்த விசாலமான அறையில், மேலாளர் இருக்கையில்கூட அமராமலிருந்த சபேசன்,தனக்கு எதிராக அமர்ந்திருந்த, இராமகிருஷ்ணனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“திட்டம்போட்டு திருடுற கூட்டம்,திருடிக் கொண்டே இருக்குது..” சமயம் தெரியாமல் யாருடைய கைபேசியோ தனது ரிங்டோனில் அலறியது.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (21-Sep-13, 2:14 pm)
பார்வை : 254

மேலே