ஒருவந்தம் அறுக்க ஓங்கிடும் ஆசையில்
காற்றினை எதிர்த்துக் கீழே ஓடிடும்
ஆற்றின் எதிர்த்த திசையினை நோக்கி
இறந்த உயிர்களின் ஆன்ம ஏற்றமாய்
பறந்து திரிந்தன கருப்புப் பறவைகள்
வழித்த மண்டையில் வேர்வை வழிந்திட
சுழித்த காலச் சக்கரம் சுழன்றிட
பழித்துச் சொன்னப் புரியா மந்திரம்
விழித்து விழித்து வியந்தே சொன்னான்.
ஆசனம் விட்டு ஆகாயம் பார்த்தவன்
பாசப் பெற்றோர் பறப்பதாய் எண்ணி
படையல் சாதத்தை இலையில் இட்டான்
கடைவிழி நீரினை நிலத்தில் சொட்டியே
புதிரென வந்த புண்ணியன் பார்க்கையில்
கதிர்களைச் சாய்க்கும் காற்றின் தயவில்
நெய்யதன் வாசம் நெடுகிலும் வீசிட
எய்திய அம்பென வந்தன காகங்கள்.
காப்பு இதுவென சாம்பலைப் பூசினும்
நாக்கு குழறாமல் வேதம் உரைப்பினும்
பார்ப்பு உயிரது சிறகு முளைத்தால்
ஆர்த்துப் பறந்திடும் அதுவே உண்மை
உண்மை தந்திட்ட உயரிய ஞானத்தால்
தோரண மனதினைத் திரிய விடாமல்
ஒருமைப் படுத்தி ஒருபக்கம் நடந்தான்
ஒருவந்தம் அறுக்க ஓங்கிடும் ஆசையில்.
வீச்சு ஒன்றிலே உணவினைக் கவ்வி
உச்சிக்குப் பறந்து மறைந்த அவற்றை
உம்பராய் நினைத்து உம்பரம் நோக்கினான்
உலோசன நீரினால் பார்வை உறைந்திட
கிச்சிலி மரமொன்றில் சிச்சிலிக் குருவியின்
துச்சல் கண்டவன் துஞ்சலை மறந்து
அளவாய் எடுத்த அடிகளை இட்டு
வளமும் வாழ்வும் பெற்றிட மீண்டான்..