எதுதான் உண்மை?

நிலவும் சூரியனும்
நிலவும் பொழுதே
நிலவும் ஒளியென்றால்
நிலவும் இருளே
நிலையாமோ!

மேகம் கூடியும்
மேலே மூடியும்
கூடும் கருப்பும்
கூறும் நிசமும்
இருளே நிரந்தரமோ!

இருளோ!ஒளியோ!
எதுதான் நிலையோ!
இருளில் ஒளிந்த
பகலோ!இல்லை
பகலுக்குள் இரவோ!

பகலவன் விழுந்திட
பகல் ஒளிகிறது.
பகலவன் எழுந்திட
இரவு விடிகிறது.
சூரியன் விளையாடுகிறது.

வெண்மை கருக்கும்
கருமை நிறைக்கும்.
வெண்மை நிலைக்காது
கருமை வெளுக்காது
உண்மையும் பொய்க்காது.

சந்தியா பொழுது.
சந்திக்கும் பொழுதுகள்.
மாயை மயங்கி
நியாயம் விளங்க
ஈழமாய்ச் சிவக்கிறது.

சிவந்து கருத்து
உவந்து கலந்து
உதிக்கும் அந்த
விதித்த தமிழின்
விடியல் வரட்டும்!

எதுதான் உண்மை
இரவா பகலா?
எதுதான் நிலைமை
இருளா ஒளியா?
இயற்கை சொல்லட்டும்!

ஜெயதாமு.

எழுதியவர் : ஜெயதாமு. (29-Sep-13, 6:57 pm)
பார்வை : 161

மேலே