கறுப்பு வெளிச்சம்-கே.எஸ்.கலை

அந்த நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஒரே ஒரு மரத்தின் மீது வாகனங்கள் துப்பிச் சென்றிருந்த கரியமிலப் புகையினை அதிகாலைப் பனி மெதுமெதுவாக கழுவிக் கொண்டிருந்த விடியற் காலை ஐந்து மணி....

சாருமதி பக்கத்தில் படுத்திருந்த தன்னுடைய தோழியும் சகாவுமான லீலாவின் தூக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்ற கரிசனையுடன் மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி சோம்பல் முறித்துக் கொண்டு தேநீர் ஒன்றைப் பருகும் நோக்குடன் மின்சூடேற்றியைக் கையிலெடுத்தாள்....

அடித்து போட்டாட்போல வலிக்கும் உடம்பின் அசதியை, இன்று வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குப் போகிறேன் என்ற சந்தோசத்துக்குள் ஒளித்துக் கொண்டு தேநீர்ப் பாத்திரங்களைக் கழுவி மேசையில் வைத்துவிட்டு ஓரமாய்க் கிடந்த நாற்காலியில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள்...

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது.....” என்ற மெல்லிசையை தலையணைக்கடியில் கிடந்த சாருவின் கைப்பேசி முணுமுணுத்த நேரம் அதிகாலை ஐந்து பதினைந்து...

அசதியுடன் கைப்பேசியை எடுத்து காதில் ஒட்டவைத்துக் கொண்டாள்...
மறுமுனையில் ரூபன்...

“சாருமதி இண்டைக்கு கொஞ்சம் வெள்ளன வர முடியுமா”

“ஐயோ சார் இண்டைக்கு நான் ஊருக்கு கிளம்புறன்..நேற்றே உங்களுக்குச் சொன்னனான் தானே ?”

“ஓம்..ஓம்...சொன்னதான் பிள்ள..மறந்தே போயிட்டன்...எத்தின மணிக்கு நீ வீட்ட கிளம்புற...”

“நான் இப்போது வெளிக்கிட்டுக் கொண்டிருக்கன் சார்...விடியவே கிளம்பினாத் தான் வேளைக்கு வீட்டப் போய்சேர முடியும்....”

“ஓ...சரி பிள்ள...கொஞ்சம் அவசரமா நீ வரவேண்டிக் கிடக்கு நீயே தான் வந்தாகணும்....அதான் பிள்ள...”

“ப்ளீஸ் சார்...நான் வீட்டப் போய்ச் சேருவதற்கு இப்போது கிளம்பினாத் தான் சரி...இல்லையெண்டா அங்கால போறதுக்கு எனக்கு பஸ் இருக்காது...பிறகு கஷ்டம்”

“சரி..சரி...நீ இப்போ இங்க வாரத்துக்கும் அங்கால போயிட்டு வீட்டப் போறதுக்கும் உனக்கு ஓட்டோ காசு தாரன் பிள்ள...ஒருக்கா வந்துட்டு போ சாருமதி..”

அந்த அதிகாலை நேரத்தில் மறுபக்கத்தில் இருந்து பேசிய ரூபனின் குரல் கொஞ்சம் கண்டிப்பாக அதிகாரத் தொனியில் சாருமதியிடம் வேண்டிக் கொண்டது...

வேறெதுவும் செய்ய முடியாது என்பதால் சரி போனதும் வரலாம் என்ற எண்ணத்துடன் விரக்தி, கோபம், சோகம் எல்லாவற்றுடன் தேநீர் வடித்த தேயிலையையும் சேர்த்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இரவி உடையைக் கழற்றிவிட்டு, துவாலையை எடுத்து சுற்றிக் கொண்டு விறு விறுவென குளியலறை பக்கம் நகர்ந்தாள்...
---------------------
ரூபனின் கோரிக்கைப்படி சென்று இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் மீண்டும் அறையை நோக்கி விரைந்து வந்தாள் சாரு...

“எங்கே போனாய்” என்ற தொனியில் லீலா சாருவைப் பார்க்க

“விடிய காலையிலேயே வர சொல்லி கூப்பிட்டாண்டி...வீட்ட போகணும் என்று சொல்லியும் வரச் சொன்னான்...முடியாது என்று சொல்ல முடியாதே...அதான் போயிட்டு வந்தன்...!”

சொல்லிக்கொண்டே வீட்டிற்குப் போவதற்கு உடுத்துவதற்காக கட்டிலுக்கடியில் கிடந்த பயணப்பையின் அடியிலிருந்து வெளிர் மஞ்சளும் பச்சையும் கலந்த சல்வாரை எடுத்தாள் அழுத்துவதற்காக !

டெனிம். டீஷர்ட், குட்டைப்பாவாடை என்று தனது நாகரீகத்தை மாற்றிக் கொண்டாலும் ஊருக்குச் செல்லும் போது குடும்பப் பாங்காய் சல்வார் உடுத்தி போக வேண்டும் என்பது அவளின் எண்ணமாக இருந்திருக்கும் !

அவசர அவசரமாக சல்வாரை அழுத்தி சுவரில் தொங்கவிட்டு விட்டு வியர்வைப் போக கொஞ்சம் உடல் நனைத்துக் கொண்டு கடுகதியில் ஊருக்குப் போக தயாராகினாள் !

கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்த லீலா

“ஏய் கையில எவ்ளோ காசு வச்சிருக்கடி...போதுமா இருக்கா வீட்டுக்கு போக”

என்று தூக்க கலகத்திலேயே கேட்டாள்...

“ரெண்டாயிரம் இருக்குடி...நேத்து வீட்டிற்கு கொண்டு போக சாமான் வாங்கினன்...அதான் கொஞ்சம் செலவாகிட்டு...போதாது தான் இருந்தாலும் சமாளிச்சிக்கிட்டு வாரன்”

“ம்ம்ம்ம்...என்ன வாங்கின”

கேட்டுக் கொண்டே அசதியுடன் எழுந்து தலையணையை சுவற்றில் சாத்திக் கொண்டு சாய்ந்துக் கொண்டாள் லீலா...

“அந்தா அந்த பேக்கில் இருக்கு அத கொஞ்சம் எடுத்து ரெடி பண்ணி தாயேண்டி.. நல்லா லேட் ஆகிட்டுது”

பரபரப்புடன் லீலாவை பணித்தாள்...

“ம்ம்ம்ம் என்னடி நீ...எனக்கு உடம்புக்கு முடியல நீ வேற...நைட் வாரப்ப பன்னிரண்டு மணியிருக்கும்....”

லீலா முணுமுணுக்க....

“என்ட செல்லம் தானேடி...செஞ்சி தாயேன்.. ப்ளீஸ்டா”

விருட்டென லீலாவின் கன்னத்தை ஒரு கிள்ளு கிள்ள

“ஆமா வேலை வாங்க நீ கெட்டிக்காரிடி”

சொல்லிக் கொண்டே எழுந்த லீலா கட்டிலின் ஒரு ஓரத்தில் கிடந்த அந்த பையை இழுத்தெடுத்தாள்....

அந்தப் பையுள்
ரொம்ப நாளாக நோயாளியான அம்மாவிற்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த பட்டுச் சேலை...உயர்கல்வி படிக்கும் தங்கைக்கு சில பாடபுத்தகங்கள் , மேலதிக வகுப்புகளுக்குப் போகவென அவள் கேட்டிருந்த சல்வார், பாதணி, பெண் பிளளைகளுக்குத் தேவையான இன்னும் சில அழகுசாதன பொருட்கள் உட்பட தம்பி கேட்ட கணிதப் பெட்டி , அட்லஸ் புத்தகம் , அவனுக்கொரு கருப்பு சப்பாத்து என வீட்டில் தன்னையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் சொந்தங்களுக்கு தேவையான அனைத்தையும் தன்னால் இயன்ற வகையில் வாங்கி வைத்திருந்தாள் சாரு.

அவற்றை கவலையுடன் எடுத்து பக்குவமாக சாருவின் பயணப் பையில் அடுக்கிக் கொண்டே...

“ஏண்டி உன்கிட்ட இருக்க காசு போதுமா ?”

லீலா கேட்க....

“அதான் சொன்னேனே ரெண்டாயிரம் இருக்குன்னு”

கொஞ்சம் குமுறலோடு வந்த வார்த்தைகளை குமுறலாக வெளிக்காட்டாமல் சாரு சொல்ல...

“சரி என்கிட்டே ஒரு மூவாயிரம் இருக்கு தரேன்..போயிட்டு வந்து தா...உங்க அம்மாவுக்கு மருந்து வாங்கனும்னு சொன்னியே...”

“இல்லடி நான் இருக்கதுல சமாளிச்சுக்கிறேன்..உனக்கும் காசு தேவ தானேடி“

என்று சொன்ன சாருவின் பதிலை காதுள் வாங்கிக் கொள்ளாமல் தனது கைப்பையில் இருந்த மூவாயிரத்தைநூறில் ஐநூறு ரூபாயை செலவிற்கு வைத்துக் கொண்டு சாருவிடம் நீட்டினாள் லீலா !

வேண்டாம் என மறுத்த சாருவிடம் பலாத்காரமாக கொடுத்து அவளை நல்லபடியாக போயிட்டு வா என்று கவலை நிறைந்த முகத்துடன் கூற...தோழியின் அன்பில் நெகிழ்ந்து அவள் தந்த பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆயத்தமானாள் சாரு.

“ஏய் சல்வார்ல ரொம்ப அழகா இருக்கடி...”

சொல்லிக் கொண்டே அவளது பொதி ஒன்றை தூக்கிக்கொண்டு ஒத்தாசைக்கு வெளியில் வந்து வழியனுப்பி வைத்தாள் லீலா !
--------------------

காலை ஒன்பதரை மணிக்கு இரைச்சலும் புழுதியுமாய் இருந்த அந்த அரச பேரூந்து தரிப்பில் தனக்கான பேரூந்து வரும்வரைக்கும் காத்திருந்த சாரு, பக்கத்தில் இருந்த பழக கடைக்கு ஓடிச் சென்று வீட்டிற்கு கொண்டு போக அப்பில், தோடை, திராட்சை என இரண்டு மூன்று வகை பழங்களை வாங்கி பையுள் திணித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கும் போது தனக்கான பேரூந்து வந்திருந்ததைக் கண்டு பெருமூச்சொன்றை விட்டப் படியே வந்து வசதியான ஜன்னலோர இருக்கையொன்றை தேடி அமர்ந்துக் கொண்டாள்.

அவ்வளவாக கூட்டம் இல்லை அதனால் தொல்லையின்றி வீடு போய் சேரலாம் என்றெண்ணிக் கொண்டு கையில் இருந்த பயணப் பையை இருக்கைக்கு மேல் இருந்த இறாக்கையில் பக்குவமாக வைத்துவிட்டு கைபேசியில் ராணி அக்கா வீட்டிற்கு அழைத்து தான் வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கும் தகவலை வீட்டிற்குச் சொல்லி விட கேட்டுக் கொண்டாள் !

ஜன்னலை லேசாகத் திறந்து வைத்து காற்றுவாங்கிக் கொண்டே ஏதோ யோசனையில் மூழ்கிவிட்டாள்...

சுமார் ஒரு வருடத்திற்கு முன் தன் தந்தை திடீரென இறந்துப் போக, குடும்பத்தை சமாளிக்க வேண்டி பட்டணத்திற்கு வந்தவள் சாருமதி...ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துக் கொண்டிருந்தவள் தன் வாழ்கையில் எப்படியெல்லாம் விதி விளையாடிவிட்டது என்று யோசித்தவளாய் ஜன்னலோரமாய் லேசாக தலையை சாய்த்து தனது கடந்தகாலத்தை நினைத்துக் கொண்டிருந்தாள்.

வறுமை வாட்டி எடுத்தாலும் திறம்பட படித்து உயர்தரம் படிக்க எத்தனித்த நேரத்தில் தான் அவளது வாழ்கையில் புயல் அடிக்கத் தொடங்கியது.

தந்தையின் திடீர் மறைவால் கிடைத்துக் கொண்டிருந்த சொற்ப வருமானமும் நின்றுப் போக வேறு வழியில்லாமல் குடும்ப சுமையை தன் தலையில் ஏற்றிக் கொண்டு, நோயாளி அம்மாவை கடைசி வரைக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும் , தங்கையும் தம்பியும் படித்து நல்ல உத்தியோகம் பார்க்க வேண்டும். தனக்கு கிடக்காத வாழ்க்கை தங்கைக்கும் தம்பிக்கும் கிடைக்க வேண்டும் என்ற அபிலாசைகளை கனவாக வைத்துக் கொண்டு வந்து கொஞ்ச கொஞ்சமாய் தனக்கு கிடக்கும் வருமானத்தில் தனது கனவுகளை மெய்பித்துக் கொண்டிருகிறாள் !

ஏதேதோ யோசனைகளை மனதுள் வைத்துக் கொண்டிருந்த சாரு ஜன்னலில் சாய்ந்து அப்படியே தன்னையறியாமல் தூங்கிவிட்டாள். பேரூந்து பயணிக்க தொடங்கி சில ஊர்களை கடந்துக் கொண்டிருக்கும் போது திடுக்கென விழித்துக் கொண்டாள்...

பக்கத்து இருக்கையில் இருந்த ஏதோ உயர் தொழில் செய்யும் வகையில் உடுத்தியிருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரிய மனுஷன் தன்மீது வேண்டுமென்றே உரசிக் கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சலடைய அவனது முகத்தை கோபத்துடன் பார்த்தாள்....அசடு வழியும் முகத்தோடு மறுபக்கம் அவன் திரும்பிக் கொள்ள அருவருப்புடன் சாரு “வெட்கம் கெட்ட நாய்கள் மகள்ட வயசில் இருக்குற பிள்ளைகளக் கூட விடமாட்டானுங்க” என்று அவனுக்கு விளங்குமாறே சொல்லிக் கொண்டு, எழுந்து முன்னால் காலியாக கிடந்த இருக்கைக்கு மாறிக் கொண்டாள்.

எரிச்சலும் கோபமும் வர தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தந்து பயணத்தை தொடர்ந்தாள்....
---------------------
மாலை ஐந்து மணி....சாருவின் வீடு
படுக்கையில் எழுந்து நிற்கக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த தாய் சாருவின் வருகையை கண்டு மலர்ந்த முகத்துடன் கண்ணீர் வடித்தவாரே எழுந்து வர முற்பட இருங்க அம்மா என்று வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டு தாயின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்....
வெளியில் இருந்து ஓடிவந்த தம்பி
“அக்கா நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்திங்களா” என்று ஆவலுடன் கேட்க..
“அந்தா அந்த பேக்கை எடுத்துகிட்டு வா அதில இருக்கு”

என்று சொல்லிக் கொண்டு அவனது பொருட்களை எடுத்துக் கொடுக்க அவனது முகத்தில் சந்தோஷ வெளிச்சமடித்தது... தங்கையின் மேலதிக வகுப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வர, ஓடிவந்து அக்காவை கட்டிப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்து அக்கா வாங்கி தந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அக்காவின் காலடியில் அமர்ந்துக் கொண்டு...

“அக்கா எப்டிக்கா இருக்க...வேலையெல்லாம் எப்படி போகுது....இன்ன ஒருவருஷம் தான்க்ங்கா அப்புறம் நானும் உன்ன போலவே வேலைக்குப் போயிட்டு உனக்கும் சேர்த்து சாப்பாடு போடுறேன் சரியா ?”

என்று வாஞ்சையுடன் சொல்ல சாருமதி பெருக்கெடுத்த கண்ணீரை அடக்கிக் கொண்டு தங்கையின் தலையைத் தடவியவாரே....

“இல்லம்மா நீ ஊருலயே தான் வேலை செய்யணும், பட்டணத்து வேலை ரொம்ப கஷ்டம்....நீ நல்லா படிச்சி இங்கயே டீச்சர் வேல செய்யணும் சரியா..அது தான் நீ அக்காவுக்கு செய்யிற கைமாறா இருக்கனும்”

என்று சொல்லிக் கொண்டிருக்க அம்மா சாரு வாங்கி தந்த பட்டுச் சேலையை நடுங்கும் கைகளில் எடுத்து பெருமையுடன் சாருவை இழுத்து முத்தமிட்டுக் கொண்டிருக்க ...அந்த குட்டி வீடு முழுவதும் சந்தோஷ வெளிச்சம் அடித்துக் கொண்டிருந்தது !
------------------------
“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது”

கைப்பேசி முணுமுணுக்கிறது...அழைப்பில் லீலா...கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்த படியே வெளியில் வருகிறாள் சாருமதி !
-------------------------
பாவம் அவர்கள் யாருக்கும் தெரியாது தற்போது சாருமதி செய்யும் தொழில் விபச்சாரம் என்பது !

எழுதியவர் : கே . எஸ் .கலை (2-Oct-13, 9:52 am)
பார்வை : 336

புதிய படைப்புகள்

மேலே