ஆங்கிலத்தில் பேசினால் (கட்டுரை)

ஆங்கிலத்தில் பேசினால்!
@@@@@@@@@@@@@@@

இரண்டு நாட்களுக்கு முன் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது இரண்டு பேர் மட்டும் பேசிக்கொண்டே இருந்தனர்.வகுப்பு நேரம் தடைப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களைக் கண்டுகொள்ளாமல் பாடத்தை எடுத்து முடித்தேன்.அதன்பின் அவர்களிடம்
'வகுப்பு எடுக்கும்போது பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்.
வகுப்பு நேரம் முடிந்த பின் நான் நண்பர்களைப் போல் பழகுபவன் என்பதால் அவர்களும் ,பேசிக்கொண்டிருந்த விஷயத்தைக் கூறினர்.
என் வகுப்புக்கு முதல்நாள் ,அவர்களில் ஒருவன் தன தந்தையின் துள்ளுந்தில்(பைக்) சாலையில் உரிமம் இல்லாமல் சென்றிருக்கிறான்.அப்போது போலீஸ் சோதனை நடைபெற்றிருக்கிறது.உடனே அவன் தமிழே தெரியாதது போல் ஆங்கிலத்தில் பேசி அவர்களிடம் அபராதம் கட்டாமல் தப்பித்து வந்திருக்கிறான்.அதெப்படி ஆங்கிலத்தில் பேசினால் விடுவார்கள்,? என்று நான் கேட்டதற்கு
நிறைய போலீஸ்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது .அதனால்தான் தப்பித்தேன்.என்று கூறினான்.இதைப்பற்றித்தான் என் வகுப்பின் போது பேசிக்கொண்டு இருந்திருக்கின்றனர். நான் சிரித்துவிட்டு ,சரி இனி வகுப்பு நேரத்தில் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு வந்தேன்.
நேற்று இரவு என் வேலைகளை முடித்துவிட்டு என் துள்ளுந்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஓரிடத்தில் போலீசார் குடித்துவிட்டு வண்டி ஒட்டுபர்களைப் பிடிப்பதற்காக நின்றுகொண்டு இருந்தார்கள்.
என்னையும் மறித்து வாயை ஊதச் சொன்னார்கள்.
மாணவர்கள் சொன்னது நினைவுக்கு வர நானும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று ஆங்கிலத்தில்,
நான் குடிப்பதை விரும்பாதவன் என்று கூறினேன்.
உடனே ஒரு காவலர் ,ஆய்வாளரை "அய்யா ! இவர் ஆங்கிலத்தில் ஏதோ உளறுகிறார்! குடித்து இருப்பார் போல!" என்று கத்தினார்.அருகே வந்த ஆய்வாளரிடம் ஒருமுறை வாயை ஊதிக் காட்டிவிட்டு நான் குடிக்கவில்லை என்பதை இன்னொருமுறை விளக்க வேண்டியதாய் ஆகி விட்டது.
மாணவர்களிடமும் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.என்று எண்ணுபவன் நான்.இனி மாணவர்களிடமும் தேவையானதை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (8-Oct-13, 2:15 pm)
பார்வை : 70

மேலே