உழைப்பின் விளிம்பில்.... (வாழ்த்துக் கவிதை)

அலுவலக அத்தியாயத்தின்
கடைசிப் பக்கம்...
எழுதப் படுகிறது பாராட்டுகளால்...
படிக்கப்படுகிறது வாழ்த்துக்களால்...
முற்றுப் புள்ளி
இன்னும் சில மணித் துளிகளில்!!!

இனி
காலை நேர பரபரப்பு இல்லை
மாலை நேர சோர்வுகள் இல்லை
அதிகாரிகளின் ஏவல் இல்லை
அவசர... அவசர... பணிகள் இல்லை!!!

மறு ஆய்வுக் கூட்டமில்லை
முடிக்கப் பெறா கோப்புகள் இல்லை
தலைமைச் செயலக அழைப்பு இல்லை
தாறுமாறான கேள்விகள் இல்லை!!!

மிரட்டிய கடிகாரமும்
விரட்டிய காலமும் - இனி
என்ன செய்யும்???

உம்முடைய நேரம் ஆரம்பம்
விரட்டியடிக்கலாம்
மிரட்டியதையும், விரட்டியதையும்...
காலமும் நேரமும்
இனி உம் வசமாய்...!!!

தலைப்புச் செய்தியை மட்டும்
தேடிப் படித்த விழிகள்
இனி ஒவ்வொரு வரியாய்....
ஒவ்வொரு பக்கமாய்....
வண்ணம் கூட்டிய
விளம்பரங்கள் சேர்த்து
ஒன்று விடாமல்....!!!

ஓடிக் கொண்டிருந்த நேரமும்
காத்திருக்கும்
எத்தனை பணி
முடிக்கும் வரையிலும்...!!!

ஆரோக்கியம் உம்மை
ஒட்டிக் கொள்ளும்...
அசதியை அதுவே
வெட்டியும் கொல்லும்....!!!

இறைவனளித்த வரம்
நாளை முதல் நடைமுறையில்..
இனி என்றென்றும்
இன்புறும் நாளாய்....
இறைவனின் ஆசியுடன்...!!!

(இக்கவிதை என் அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற நிகழ்ச்சியில் நான் வாசித்தது)

எழுதியவர் : சொ. சாந்தி (10-Oct-13, 11:14 pm)
பார்வை : 19108

மேலே