"படீங்க! ஜெயிங்க! ஊருக்காய் உழைங்க!"
"டேய்! சந்திரா! சந்திரா!"
"என்னப்பா?"
"எங்கம்மா சந்திரன்?"
"கதிரவன் போனா தான்டா சந்திரன் வருவான்"
"போங்கம்மா எப்போதுமே உங்களுக்கு கிண்டல் தான்"
அதே நேரம் சந்திரனும் வந்து சேர்ந்தான்.
கதிரவனும், சந்திரனும் சேர்ந்து பிரகாசத்தின் வீடு சென்றார்கள்.
"டேய் பிரகாசம். டைமாச்சு வாடா"
"ஆத்தா கொஞ்சம் தண்ணி எரச்சி கொடுக்க சொன்னிச்சு. அதான்டா லேட்டு"
"சரி வாடா போலாம். போற வழியில ஜோதிமணியையும் அழைச்சிட்டு போலாம்"
இந்த நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகத்தான் பள்ளிக்கு போவார்கள் வருவார்கள்.
தினமும் இவர்கள் நான்கு பேரும் பள்ளிக்கு லேட்டாகத்தான் போவார்கள். வாத்தியாரிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.
அன்று வாத்தியார் நீங்கள் நால்வரும் அவரவர் பெற்றோருடன் தான் இனிமேல் வரவேண்டும் என்றார்.
அவர்கள் இருப்பிடம் ஒரு கிராமம். நான்கு பேர் குடும்பமும் விவசாயக் குடும்பம்.
அடுத்த நாள் பள்ளிக்கு பெற்றோர்கள் வந்தனர்.
"ஐயா! எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை. ஒரே ஒரு அரசுப்பேருந்து தான் வரும். அதுவும் நேரத்துக்கு வராது. அந்த பஸ்சுக்கு நின்னா லேட்டாயிடும்னு தான் பசங்க நாலு பேருமே நடந்தே வர்றாங்க. இருந்தும் லேட்டாயிடுது போல. நீங்க கூப்புட்டு சொல்லீட்டுங்கள்ல, இனிமே நாங்க லேட்டாகாம பாத்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்"
ஒரு வாரம் கழித்து நால்வருக்கும் அவர்கள் பெற்றோர் கடன உடன வாங்கி சைக்கிள் வாங்கிக்கொடுத்தனர்.
பசங்களும் ஜோராக படித்தனர்.
வருடங்கள் ஓடியது.
அன்று பள்ளி ஆண்டு விழா.
தலைமை ஏற்க நான்கு முக்கிய மனிதர்கள் வந்திருந்தனர்.
அவர்கள்
கதிரவன் ஐ.பி.எஸ், மாவட்ட ஆட்சியாளர் சந்திரன் ஐ.ஏ.எஸ், போக்குவரத்து துறை அமைச்சர் பிரகாசம் எம்.ஏ.பி.எல், டாக்டர் ஜோதிமணி எம்.பி.பி.எஸ்.,
தலைமை ஆசிரியரான அவர்களது முன்னால் ஆசிரியர் அவர்களை பெருமிதத்துடன் அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தார். நால்வரின் பெற்றோரும் வந்திருந்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் உட்பட அங்கு கூடியிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கையெடுத்து கும்பிட்டனர்.
உங்களால், உங்கள் செல்வங்களால் இந்த பள்ளிக்கு மட்டுமல்ல, இந்த ஊருக்கே பெருமை.
நன்றாக படித்த நால்வரும் வேலை தேடி வேறு எங்கும் செல்லாமல், அவர்கள் வளர்ந்த ஊரையே வளமாக்கி விட்டார்கள். இப்போது பள்ளிக்கூடம், மருத்துவமனை என்று கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது நம்ம ஊருக்கு மினி பஸ் முதல் அரசு பஸ் வரை நேரத்துக்கு வருகிறது.
அந்த நான்கு பேருமே தங்கள் ஆசிரியரின் காலைத் தொட்டு கும்பிட்டனர்.

