முதுமை சொல்லும் பாடம்
முகத்தில் தோன்றிடும் சுருக்கங்கள்
முதுமையை நினைவுறுத்தும் அடையாளங்கள்
அகத்தில் இனம்புரியாக் கலக்கங்கள்
ஆதங்கத்தில் வெளிப்படும் நடுக்கங்கள்
வளமான வாழ்க்கைதான் வாழ்ந்துவிட்டோம்
வசதிகளை உறவுகளுக்குச் சேர்த்துவிட்டோம்
காலம்தான் இனிகழியும் வெறுமையிலே
இனிப்பான இளமைநாட்கள் நினைவினிலே
துன்பிலா முதுமையென்று ஒன்றுளதோ?
துடிப்பான தேகமும்தான் தளர்ந்திடுமோ?
புதுப்புதிதாய் நோய்களுமே தோன்றிடுமோ?
முடிவான முடிவுக்கு வழிகாட்டுமோ?
கலையாத கோலமென்று யார்க்குமில்லை!
கனிவான உண்மைசொலும் முதுமையும்தான்
நிலையாமை சிந்தனையும் வந்தேசேரும்
நினைவில் நிறுத்தியே வாழ்ந்திடுவோம்!

