பெண் பாரதிகள் !!

”பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!”
மகாகவியின் வரிகளை வணங்கியே
மாதரை போற்றியே படைக்கிறேன்

எழுத்து தள மங்கையர்களே !
எனதருமை பெண் படைப்பாளிகளே !
நவீனகால மீசையில்லா பாரதிகளே !
வணக்கமுடன் வந்தனங்கள் பல

போற்றியே நானும் பாடிடவே வந்தேன்
எழுத்தினிலே உங்களை
பாராட்டிடவே வந்தேன்
யாரைவிட்டு நான் யாரைத்தான் போற்றிட
அவரவர் பார்வையில் அவரவர் களத்தில்
அழகோடு அற்புத அரங்கேற்றமன்றோ
தமிழ் அன்னை மடியினில்
அமர்ந்தே நானுந்தான்
ரசிக்கிறேன்.. கற்கிறேன்..

உங்களின் சிந்தனையில்
உணர்ச்சி பாவனைங்கள்
அடடா...
என்னவென்று சொல்ல ?!!

எழுச்சியாய் எழுத்தில் ... ,
புரட்சியாய் படைப்பில்..
ஆசு கவியாய்,வித்தார கவியாய்
மதுர கவியாய், சித்திர கவியாய்..
காளியாய் , கண்ணகியாய்
அமுதமாய் , அக்னியாய்
சிரிப்பாய், சினமாய்
சிறுகதையாய், நகைச்சுவையாய்
என்னென்ன பாவங்கள்...!
அற்புதம்தானே நவரச சிற்பங்கள் !!
அப்பப்பா... அசத்தலப்பா...

சங்ககாலத்து பெண் புலவர்கள்
காரைக்கால் அம்மையாரையும்
ஆண்டாளையும் , ஒளவையாரையும்
உங்களின் எழுத்தில் கண்டேன்

அந்தக்காலத்து வீரமங்கைகள்
வேலு நாச்சியாரையையும்
ஜான்சி ராணியையும்
உங்களின் சிந்தனையில் கண்டேன்

எழுத்து உலகின் பெண் சிங்கங்களே !!
எழுத்து மூலம் எதுவும் மாறும் ..
பெண்ணடிமை தலையெழுத்து
வன்கொடுமை தலையங்கம்
வரதட்சனை கொடுமை
சமுதாய சீரழிவு
தமிழ் கலாச்சார இழிவு
அனைத்தும் அக்னி மைக்கொண்டு
எழுதிய உங்கள் எழுத்தை ரசித்தேன்

ஆசைக்கு கொஞ்சம் எழுதியதையும்
காதலை கொஞ்சிய கவியையும் ரசித்தேன்
தாய்மையான பாச படைப்பும்
பெண்மையான எழுத்தையும் ரசித்தேன்
மழலை மழையின் ரசனையும்
பக்தியின் பரவசத்தையும் ரசித்தேன்
அவ்வப்போது அவசியம் வரும்போது
புரட்சி படைத்ததையும் உணர்ந்தேன்
தேன்... தேன்.. தேன்.. தேனன்றோ
அத்தனையும் சுவை தமிழ் தேனன்றோ


--பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
--பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
--எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
--இளைப்பில்லை காணென்று கும்மியடி!

மீண்டும் பாரதியின் வரிகளை
பெண்ணடிமைவாதிகளுக்கு நினைவூட்டி ...
ஆண் படைப்பாளிகளின் சார்பில்
வாழ்த்தி வணங்கி பாராட்டுகிறேன்..

” பெண் பாரதிகளே !!
வாழ்க ! வளர்க !
எழுத்தால் புகழ் பெறுக !! “


~~~~~~~~~~~~~~~~~~~>இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (16-Oct-13, 5:44 pm)
பார்வை : 348

மேலே