பரமசிவனும் பான்கீமூனும் பால்வடியும் பாலகனும்...!!!

மீட்பரினாலும் மீட்கப்படாமல்போன
ஈராயிரத்து ஒன்பது வருடங்கள் கழித்து...
ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாய்
சிலுவையில் அறைந்தது சர்வதேசம்!

அன்றுதான்... ஈழத்தின் கிழக்குக்கரை வாய்க்காலில்
செந்நிறநீர்... ஆறாய் ஓடியது!
பரலோகத்தில் இருந்த எங்கள் பிதாவுக்கு
காது செவிடானதும் அன்றைக்குத்தான்!!

ஒரு கல்வாரிப் பயணத்தை
முப்பது வருடங்களாய் சுமந்து களைத்த மீட்பர்,
அன்றுதான் காணாமல்போனார்!
பல யூதாஸ்கள் தோன்றினார்கள்!!

ஆட்டுமந்தைகள் எல்லாம்
பட்டியில் அடைக்கப்பட்டன!
காணாமல் போன பல ஆடுகளை
புலிதான் வேட்டையாடியதாய்
ஊருக்குள் கதைப்பதாக
உலகச் சந்தியின் மதவடியில் உட்கார்ந்து,
பரமசிவமும் பான்கீமூனும்

பம்பலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்!

ஆனால்,
எல்லாம் புரிந்தும்...
எதுவுமே தெரியாதவன் போல்...
அப்பாவை இழந்த
அம்மாவின் கையைப் பிடித்தபடி...
வாய்க்குள் விரலை வைத்தபடி...

மூக்குச்சளி வழிந்தபடி...
முள்ளுக்கம்பிகளின் ஓரமாய் நடந்து,
முகமூடித் தமிழனைத் தாண்டி வந்து,
தன் முன்னாலிருந்த முள்வேலியையே
முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்,
முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த...
சின்னஞ்சிறு சிறுவனொருவன்...!!!

எழுதியவர் : ஒருவன் கவிதை (18-Oct-13, 5:33 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 57

மேலே