என் உயிர்த் தோழி
புன்னகையால் பூக்களையும்
வசீகரித்து கவர்ந்திடும்
`அபாயாவுக்குள்` ஒளிந்திருக்கும்
அழகு தேவதை என் தோழி .........!
வயதில் இளையவளானாலும்
என் மனதில் உயர்ந்தவள்....
மதத்தால் வேறுபட்டாலும்
அவள் குணத்தால் பசுந் தங்கம்.....!
தமிழ் போதிக்க நானும்
ஆங்கிலம் போதிக்க அவளும்
ஆசிரியைகளாகப் பணியாற்ற வந்து
இணைபிரியா தோழியரானோம்...!
அஜந்தா ஓவியமாய் ஆழப் பதிந்த
மறக்கமுடியா அந்த இனிய நாட்களில்
ஆதரவற்ற பிள்ளைகளின் அன்பில்
உள்ளம் நெகிழ்ந்த பசிய நினைவுகள்...!
`உம்மா` என்றழைத்து அவளம்மாவில்
என் தாயைத் தரிசித்த பொழுதுகள்....
நோன்பு காலத்தில் அவள் குடும்பத்தில்
ஒன்றாகி உணவருந்திய நாட்கள்.....!
சுற்றிவர அமர்ந்து வேற்றுமை களைந்து
ஒரு தட்டில் அனைவருமுண்ட
அழகிய அவளது திருமண நாள் ........!
திருமணத்தின் பின்னைய நாட்கள்
அவள் பிரிவைத் தாங்கமுடியாமல்
உள்ளே உடைந்து அழுத வாரங்கள்....!
விதியின் கோலத்தால் பிரிந்தாலும்
தொடர்புகளின்றிப் போனாலும்
நினைவுகளால் வாழ்கின்றாள்
என்னுள்ளே எப்போதும் என் தோழி ...!
----------------------------------------------------------------
தோழி துர்க்கா