ஆவி பறக்கும் சூரியன்

வனமெல்லாம்
வசந்தத்தின் வெள்ளையடிப்பில்
வெண்ணிலா ஒளி பாய்ச்சிய இரவு
தொலைவில் பசியின் நரி ஊளை
நாலாபுறமும் சுற்றிக் கேட்கிறது,
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
ஒரு வெள்ளி ஓட
கண்ணைப் பொத்துகிறாள்
பார்த்தால் மறதி வருமெனச் சொல்லி
விரலிடுக்கில் பார்த்ததறிந்து
பச்சை மரத்தை பார் என்கிறாள் நினைவுகள் தங்க,
மெல்லத் தோண்டியதும்
எட்டிப் பார்க்கிறது மணலில்
முந்தினம் பெய்த மழை ,
தோளில் தலை சாய்கிறாள்
காதுக்குள் முனுமுனுக்கிறாள்
நான் அவளாகிறேன்
அவள் நானாகிறேன்
இரவை பழக்கிய நாள்கள் அது
தோழியில்லை செவிலியில்லை
குறுந்தகவலில் சொல்லியவாறு சந்தித்தாயிற்று
கோழி கூவுவதற்கு முன்
கொல்லை வழியா போயிடனும்
நண்பர் உறங்கும் கொட்டகைக்கு
உள்ளுக்குள் ஒரு உலறல்,
காமத்தால் காதலித்து,
காதலால் காமத்தை விரட்டியடித்த
அந்த இரவுகள் மெல்ல மெல்ல விடிகிறது,
வழக்கம் போல் பால்க்காரர் சைக்கிள் சத்தம்
லிட்டரில் கேட்கிறது,
ஸ்ட்ராங்கா
டீக்கடை அரசியல் பேச்சில்
ஆவிபறக்கிறது,
மூடியிருந்த போர்வையை
ஏதோவொரு கையிழுக்க
முகத்தில் சுள்ளென காறித்துப்புகிறான் சூரியன்.