பீச்சிலிருந்து பச்சையப்பாஸுக்கு ஒரு டிக்கெட்
யாருமற்ற அந்தக் கடற்கரை
இன்னிசையாய் கடலலை
குயில் நிறத்தில் கூவிக்கொண்டு
இரவு,
உறவுகளைத் தொலைத்த தடங்கள்
மணல் மூடிய படி,
குழிக்குள் புதைந்து கிடந்த ஹீல்ஸ் செருப்புகள்,
யார் யார் நினைவுகளோ
இடம் மாறி
இடம் மாறி கிடந்தன.
ஒதுங்கிக் கொண்டிருந்தது
வெளிச்சத்தை விரும்பாத காமம்.
அம்மா அப்பா விரல் பிடித்த
பிஞ்சுப் பாதங்களில்
புதுசு புதுசாய் ஆனந்தம்.
பரவிக் கிடந்த மணலில் சிரித்தபடி
பலரின் போலி முகங்கள்,
ஒரு மண்ணும் தெரியாமல் மல்லிகைகள்.
எல்லாம் பொய்யல்லயென்று
இப்போது வருவது போல்
அப்போது வந்தார்கள்
சுத்தமாய் காட்டிக்கொள்ள கையைக் கழுவிக்கொண்டு.
றெக்கை ஒடிந்த பறவையாய் கிடந்தது
மாற்றுக் கல்யாணமாகிப் போன காதல்.
பெண்ணாயைப் பார்த்துக் குறைத்தன
ரெண்டு மூன்று ஆண் நாய்கள்.
வேகம் காட்டினார்கள் காவலர்கள்
கண்ணும் கருத்துமாய் வீட்டுக்குச் செல்ல,
சத்தமில்லாமல் புகைப் படமெடுத்துக் கொண்டிருந்தது
கலங்கரை விளக்கம்
எனக்குப்பிடித்ததாய் இருந்தது
அந்த உப்பங்காற்று
எல்லா விளக்குகளும்
தனிமையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தன
வெறிச்சோடிப் போயிருந்தது
என்கவிதை,
அந்தக்கடற்கரை இருளை வெளிச்சமாக்கி
கட்டிப்பிடித்து கை குலுக்கினார்
கவிதையைப் படித்த
பொன்னகரம் எழுதியப் புதுமைப்பித்தன்.