பெருமைக்குரிய கல்வியே!

தினம் தினம் எனை வதைக்கும்
பெருமைக்கு உரிய
கல்வியே!
உனக்கு என்ன தான் வேண்டும்?

உன்னை குறை கூற
எனக்கு தகுதி இல்லை!
ஆனால் நான் படும் துயரம்
நீ அறிய வேண்டாமோ?

புரிந்தாலும் புரிய மறுத்தாலும்
படித்ததை மென்று விழுங்கி
பரீட்சை பேப்பரில்
கொட்டி விட வேண்டுமாம்!

இல்லையேல்
பெரிய கொட்டு விழும்
என் தலையில்!
என்ன பாவம் செய்தேன் நான்!

ஒற்றை கேள்விக்கு
நூறு பக்கங்களில் பதில்!
அதை ஆறு பக்கங்களில்
அடக்கிவிட வேண்டுமாம்!

இரவெல்லாம் கண் விழித்து
இமை தட்டாமல் படித்தும்
ஆறு பக்க விடையில்
ஆறு வரிகள் மட்டுமே நினைவில்!

அப்போது விழித்து கொள்வார்
என்னுள் இருக்கும் கதாசிரியர்..
ஆறு வரி என்னடா?
அறுபது பக்கங்கள் நிரப்பிவிட்டேன் பார்!

சாதனை புரிந்த மகிழ்ச்சியில்
துள்ளி குதித்து வெளியே வந்தேன்..
இருந்தாலும் ஒரு உறுத்தல்
நானெல்லாம் படித்து என்ன சாதித்தேன்?

தேர்வு முடிவுகள் கண் முன்னே
பல் இளித்து நிற்கின்றது..
ஜெயித்தால் கொண்டாட்டம்
தோற்றால் பெரும் திண்டாட்டம்!

வேறொன்றுமில்லை!
மீண்டும் ஒரு முறை
கசாயம் போல் கரைத்து
விழுங்க வேண்டுமே படிப்பை!

கல்வியில் இல்லை குறை..
கல்வியின் கட்டமைப்பில் உள்ளது குறை..
கல்வி கற்பதில் தான் எங்கள் விருப்பம்!
கரைத்து குடிப்பதில் அல்ல!

புரிந்து கொள்வீரா?

எழுதியவர் : மது (20-Oct-13, 1:31 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 511

மேலே