பழைய பஞ்ச பாத்திரத்தை தேடிய பொழுது .....

பழைய பஞ்ச பாத்திரத்தை தேடிய பொழுது
தோன்றிய கற்பனைக் காவியம் இது ...

அலாவுதின் ..
அரேபிய கதைகளில் வரும் ஒரு சிறந்த கதாபாத்திரம்.
அவனுக்கு ஒரு அற்புத விளக்கு கிடைத்தது. நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த அற்புத விளக்கில் அடைந்து கிடந்தது ஒரு Genie என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இனி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன ?

மூச்சு கூட நிம்மதியாக விடமுடியாத அந்த சிறிய அற்புத விளக்கினுள் பல்லாண்டு காலமாக அடைபட்டிருந்த அந்த Genie க்கு விடுதலை கிடைத்தது யாரால் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

எங்கள் வீட்டில் மிகப் பழமை வாய்ந்த ஒரு பஞ்சபாத்திரம் இருப்பதாக தெரிய வந்தது. தலைமுறை தலைமுறையாக இது கைமாறி வந்ததாகவும் கேள்விப் பட்டிருந்தேன்.
ஒரு நாள் .. அந்தப் பழைய பஞ்சபாத்திரத்தை தேடி எடுத்து நன்கு கழுவி துடைத்து, அடுத்து வரும் ஆவணி அவிட்டம் நாளில் சந்த்யாவந்தனம் செய்யும் பொழுது உபயோகிக்க வேண்டும் என்று கனவில் தோன்றியது.

உடனே, பழைய உபயோகமற்ற பொருள்களை எல்லாம் கொட்டி வைத்திருக்கும், பகலிலும் இருள் கவ்வி இருக்கும் அந்த அறைக்குள் ஒரு சிம்னி விளக்கை கையிலேந்திச் சென்றேன். அந்த அறைக்குள் நுழைந்ததும் திடீரென விளக்கு அணைந்து விட்டது. நானொரு சூரன், அறிவாளி என்பது தான் உங்களுக்குத் தெரியுமே. நெஞ்சு படபடத்தாலும், கைகளில் இருந்த சிம்னி விளக்கை கீழே போட்டு விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டே, நிக்கர் பைக்குள் இடது கரத்தை நுழைத்து, வெட்டும்புலி தீப்பெட்டியை வெளியில் எடுத்து, சிம்னி விளக்கை மெதுவாக நிலத்தில் வைத்து விட்டு, சர்ர்ரென்று தீக்குச்சியை உரச ... அது எரிந்தது.

சற்றும் நேரத்தை வீணடிக்காமல், விளக்கை ஏற்றினேன். சந்திரமுகி திரைப்படத்தில் வரும் மாளிகை போன்றதல்ல அந்த அறை. சிறு பேய், பிசாசுகள், ஏன் பெரிய பெரிய பூதங்களும் கூட போகப் பயப்படும்படி இருந்த அறைக்குள் நான் சென்று விட்டதில் எனக்கென்னவோ பெருமிதம் தான். மினுக் மினுக் என்று தெரிந்த சிம்னி விளக்கின் ஒளியில் தேடி வந்ததை தேடினேன். அடேயப்பா ... எத்தனை பொருள்கள் .. இதிலிருந்து எப்படி தேடி அந்த பஞ்சபாத்திரத்தை எடுப்பது என்று மனதில் ஒரு கவலை ஏற்படத் தொடங்கி விட்டது. முருகா.. முருகா.. ராமா. ராமா .. கிருஷ்ணா .. கிருஷ்ணா என்று தெரிந்த உம்மாச்சிகளை எல்லாம் மனதில் ஜபித்துக் கொண்டே ... தேடினேன் .. தேடினேன் .. தேடிக் கொண்டே இருந்த பொழுது கையில் சிக்கியது .. நான் தேடி வந்த பொருள்.

தக் .. தக் .. தக் .. இதயத் துடிப்பு சீரானது. பஞ்சபாத்திரத்திற்குள் கைவிட்டபொழுது சிக்கியது ஒரு சிறு விளக்கு. விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தபொழுது அது அலாவுதீன் கையில் இருந்து காணமல்போன விளக்கு போல் தோன்றியது. இந்த விளக்கின் பெருமையை பல கதைகளில் படித்திருக்கிறேன். பலரும் சொல்லி கேள்விப் பட்டிருந்ததால், உடனே .. இது அது தானா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள, நெற்றியில் முத்துக்கள் போல் தோன்றி இருந்த வியர்வைத் துளிகளை வலது கையில் நனைத்து, விளக்கை துடைத்தேன். அவ்வளவு தான். புஸ்ஸ்ஸ்ஸ் என்ற சப்தம் எழ, சிறிய புகைப்படலாம் தோன்றியது. அடுத்து வரவேண்டியது அந்த Genie தானே.
முதலில் சிறிதாகத் தோன்றிய Genie சில நொடிகளில் பெரிதாகி விட்டது. நல்ல காலம் .. மேற்கூரை 12 அடி உயரத்திற்குத் தான் இருந்தது. திரைப்படங்களில் காட்டுவது போல் இல்லாமல் பார்ப்பதற்கு Genie அழகாக இருந்தது. மனதில் இருந்த ஐயம் தீர்ந்தது.

ஆணை இடுங்கள் .. ஆகா ... அடியேன் செய்ய வேண்டிது என்ன என்று கேட்டதும், இது வரை கதைகளில் வருவது போல் பல காரியங்கள் செய்யச் சொல்லி, அவைகள் அனைத்தையும் நொடிகளில் செவ்வனச் செய்து முடித்தான். நேரம் ஆக ஆக வேறெந்த பணிகளை கொடுப்பதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்த வேளை, மனதில் தோன்றியது ஒரு ஐடியா !
இனி செய்ய வேண்டிய பணி இது தான் என்று சொல்லி ..( 3 Idiots திரைப்படத்தில் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்ட அந்த ஸ்லோகத்தை), நான் சிறு வயதிலேயே என் சகோதரி சொல்லிக் கேட்டு இருந்தது நினைவுக்கு வர, அந்த ஸ்லோகத்தில் சொல்லி இருந்ததை நான்கு ஓவியங்களாய் வரைந்து அதன் அடியில் அப்பெயரினை இட்டு வரப் பணித்தேன்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட Genie, என் ஒப்பற்ற ஆகா .. இது மட்டும் என்னால் முடியாத ஒரு காரியம் ஆகும். என்னால் மட்டுமல்ல .. வேறு எவரல்லும் கூட முடியுமா என்று சந்தேகிக்கிறேன். இப்படி ஒரு பணியை எனக்கு இது வரை எவருமே தந்ததில்லை. எனக்கு இனி இச்சிறிய விளக்குனுள் வாழவேண்டிய அவசியம் இல்லை. எவருக்கும் நான் இனி அடிமையும் இல்லை. ஏனென்றால், எனக்கு விடுதலை உன்னால் கிடைத்து விட்டது. என்னைப் படைத்த இறைவன், நான் செய்த பாவத்திற்காக பிறருக்கு ஊழியம் செய்யப் பணித்து சிறையில் அடைப்பதற்கு பதில், இச் சிறு விளக்குனுள் ஆவியாக மாற்றி அடைத்துவிட்டார். பல காலம் அடைபட்டு கிடந்த நான், பிறர்க்கு ஊழியம் செய்யா திருக்கும் வேளைகளில் எல்லாம் படைத்தவனை நினைத்திருந்தேன். ஒரு நாள், என் தலைவன் அதை மெச்சி, எனக்கு ஒரு வரம் தந்தார். என்னால் செய்ய முடியாத ஒரு பணியை எவர் ஒருவர் தருவரோ .. அந்த க்ஷணமே எனக்கு விடுதலை கிட்டும் என்று அருள் வாக்கு மொழிந்திருந்தார்.
அந்த அருள் வாக்கு இன்று உன்னால் நிறை வேறிற்று. அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்றுத் தந்த உனக்கு என் நன்றிகள் உரித்தாகுக ! என்றவுடன் இனி உன்னை பார்க்கவே முடியாதா என்று கேட்க, முடியாது தான் .. ஆனால், கதைகளில் நான் வருவேன் .. என் கதைகளைப் படித்த, கேட்ட மக்களின் மனதில் என்றென்றும் நான் சிரஞ்சீவியாக இருப்பேன் ... என்றவனிடம், சில சந்தேகங்களை தீர்த்து வைப்பாயா என்று கேட்ட என்னிடம், கேளுங்கள் என்றான்.
அப்படி நீ என்ன பாவம் செய்தாய், இப்படி ஒரு தண்டனை கிடைப்பதற்கு என்று நான் வினவ, Genie தொடர்ந்து கூறியது. பல்லாண்டுகளுக்கு முன், நான் தென்னிந்தியாவில் ஒரு குறு நில மன்னராக இருந்தேன். நற்குணசீலரகுவர்மன் என்பது என் பெயர். பெயரில் தான்
நற்குணம் இருந்ததேயொழிய, நடைமுறையில் நான் செய்யாத அநியாயங்களே இல்லை என்று சொல்லலாம். மாமன்னருக்கு செலுத்த வேண்டி கப்பத்தை ஒழுங்காக செலுத்த வில்லை. மழை பொழியாததால் பயிர்கள் இட முடிய வில்லை என்று பொய் சொல்லி, மக்களிடம் இருந்து வசூலிக்கும் பணத்தை எல்லாம் என்னிடமே வைத்துத கொண்டு, உண்மையிலேயே மாரி பொய்த்து விடும் காலங்களில், மக்களிடம் இருந்து வசூல் செய்த வரிப் பணத்தை, அடியாட்கள் மூலம் கடன் கொடுத்து, வட்டி வசூலித்துள்ளேன். என் காம இச்சையைத் தணித்துக் கொள்ள, நாள் ஒரு யுவதியை பலி செய்துள்ளேன்.
ஒரு சமயம், ஒற்றர்கள் வாயிலாக, மாமன்னரின் மகள் மீது, படைத் தளபதிக்கு மோஹம் இருப்பதாகவும், அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்று வீரப்பா மகாதேவி சினிமாவில் சூளுரைத்திருப்பதும் தெரியவர, அவனுடன் கலந்துரையாடி, நான் ஒரு மாமன்னனாக வேண்டும் என்ற பேராசையின்
விளைவாக, மாமன்னரின் படைத் தளபதியுன் கூட்டு சேர்ந்து, போர் தொடுத்து அதில் படு தோல்வி அடைந்தேன். அந்த மாமன்னருக்கு குற்றவாளிகளை தூக்கில் இடுவதோ அல்லது கழுகில் ஏற்றி கொல்வதோ இஷ்டம் இல்லை. எனவே, ஆஸ்தான வித்வானிடம் என்ன தண்டனை தருவது எனக் கேட்க, அவரோ சிவபெருமான் கோவில் பூசாரியை அணுக, பூசாரி குறி வைத்துப் பார்த்து விட்டு, ஒரு பெரிய யாகம் செய்ய, மந்திர கோஷங்கள் முழங்க முழங்க, என் உருவம் மிகவும் சிறிதாகி விட்டது. அப்படி சிறிதாகிய என்னை, இந்த விளக்கினுள் அடைத்து, அதன் வாயினை மூடி வைத்து விட்டனர். பின், அதை அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரிய வில்லை.

தமிழகத்தில் இருந்த நான் எங்ஙனம் அரேபியா நாட்டிற்குச் சென்றேன் என்பதை ஏடுகளைப் சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்துத் தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
அரேபிய கதைகளில் வரும் அலாவுதின் முதன் முதலில் நான் அடைந்திருந்த விளக்கை தன் கைகளால் துடைத்துக் கொண்டிருந்தபோது, விளக்கின் மூடி உடைந்து விட்டது. இறந்து விட்டிருந்த நான் ஆவியாக விளக்கிலிருந்து வெளிப்பட்டேன். என் முதல் ஆகா அலாவுதீன் தான். அதற்குப் பிறகு நடந்தவைகளைப் பற்றி நீ கதைகளில் படித்திருப்பாயே .. என்றான். தமிழகத்தில் குறு நில மன்னனாக இருந்த என்னை, தமிழகத்தில் பிறந்த நீ, உன் திருக்கைகளால் எனக்கு பாவமன்னிப்பு அளித்ததிற்கு உன்னை எத்தனை வாழ்த்தினாலும் தகும். இதோ, இன்னும் சற்று நேரத்தில் பிரம்மா முஹூர்த்தம் தொடங்கி விடும். நான் போக வேண்டும். எனக்கு உன் அனுமதி தரவேண்டும் என்றான்

என் கனவு கலைந்தது.

எழுதியவர் : (20-Oct-13, 9:13 pm)
பார்வை : 209

மேலே