எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்
என் பெயரால்
முக நூல்களில்
அக நூல்களில்
பிர நூல்களில்
தர்க்கம்புரியும்
தர்க்கவாதிகளே...
உங்களோடு
சிலநிமிடங்கள்
நான் ஒன்றும் கோழை அல்ல
அழுது புலம்பி
ஓடி ஒழிந்துகொள்ள
நான் எப்போதும்
அன்னையர்கள்
ஆயிஷா , பாத்திமா
பாசறையில்
பக்குவப்பட்டவள்
திருமறையின்
நபி வழியில்
ஷரியா நன்னெறியில்
மரணித்துப்போவதில்
மனவேதனை ஒன்றும் இல்லை !
உங்களுக்கெல்லாம்
ஒன்றுமட்டும்
சொல்லிக்கொள்ள ஆசை எனக்கு
எனக்காக
கண்ணீர்வடிக்க வேண்டாம்
ஏன் பிராத்தனைகூட செய்யவேண்டாம்
குருவிக்கூடு போன்ற என்
குடும்பத்தை கொஞ்சம்
எட்டிப்பாருங்கள்
இறைவன்மீது ஆணையாக
என் அன்னை அழமாட்டாள் .
தயவுசெய்து
ஆறுதல் என்ற பெயரால்
அவளை நீங்கள்
கோழை ஆக்கி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
உங்கள்
ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
சீதனம் வேண்டப்படுகின்ற
திருமணங்கள் எல்லாம்
குடும்ப அனுமதியோடு செய்யப்படும்
விபச்சாரம் என்று !
நாளையேனும்
என் தங்கைகளும்
உங்கள் பெண்பிள்ளைகளும்
தலை நிமிர்ந்து
தன்மானத்தோடு வாழட்டும்
முற்றும் .
( 09/01/2013 )
சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை சகோதரி
ரிசானா நபிக் நினைவாக எழுதப்பட்டது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
