உன்னைப் போல் ஒருவன்;

"பஞ்சபூதம்"
நட்சத்திர அந்தஸ்தை விடுத்து,

சோழகம்,
வாடை,
கொண்டை,
கச்சான்

கேளிக்காக
திசைக்கோர் புனைபெயர்!

சல சல சப்தத்துடனும்
கல கல சிரிப்புடனும்
பட பட பேச்சுடனும்
ஓயாது ஓடும்
இந்த காற்று யாது?

வளிமத் தனிமங்களின் வெளியா?
நகரும் மின்னோட்டம் ஏந்திய துகளா?
இல்லை
தட்ப வெட்ப மாற்றத்தின் தவப்புதல்வனா?

காற்று யாது?

ஞாலத்தின் எச்சமா?
கண்ணுக்குத் தெரியாத கிருமியா?
இல்லை
உயிர் கொல்லும் காலன் உளவாளியா?

காற்று யாது?

இந்த லோகம் செய்யும்
உலோகம் காற்று!
கடவுள் பூமி சுற்றி வேய்ந்த
வேலி காற்று!
ஈர்ப்புவிசை படைகள் கொண்டு
உலகு காக்கும்
அரசு தான் காற்று!

------

இருதயம் தொட்டு வரும் மூச்சுக்காற்றில்
முக்கிய பிணி எடுத்துரைக்கும்
மருத்துவக் காற்று!

முதியோரில்லம் சேர்க்கும் கயவனையும்
கண்கலங்கச் செய்யும்
காவற் காற்று!

திசைதோறும் திரிந்து திக்குமுக்காடி
வேலைக்கு அலையும்
பொறியியற் காற்று!

பொறியியல்,சட்டம்,மருத்துவம் அறியும்!

ஓர் படிக்காத மேதையாய்,,,
இந்த பாராளும் பருவக் காற்று!!


------


வாயிற் கோலங்களை
வசதிக்கு கலைத்துவிட்டு
குழந்தையாக குப்பை செய்யும்!

மங்கை சேலை தள்ளி
கொங்கை தொட்டு விட்டு
கணவனாக காதல் சொல்லும்!

கரைந்த காகம் ஏமாறாமல்
புன்னகையோடு பூட்டிய வீட்டில்
உறவினராக கதவு தட்டும்!

உழைத்துக் களைத்த
உழவன் இளைப்பாற
விசிறியாக வியர்வை துடைக்கும்!

தூக்கிய பொருளை
தூரம் சென்று அலைக்கழிக்கும்
அண்ணன் தம்பியாய்,

தள்ளி ஓடும்
தங்கையாய்,

அதட்டல் செய்யும்
தந்தையாய்,

கேசம் கோதும் அன்னையாய்,

பல வேடங்களில்
பரிணாமம் தாங்கிய
ஓர் அதிசிய கலைஞன்
அங்கீகாரம் அற்ற அகதியாய்
தனக்கோர் ரசிகனின்றி!

சல சல சப்தத்துடனும்
கல கல சிரிப்புடனும்
பட பட பேச்சுடனும்
நாள் தோறும் பயணிக்கிறது நம்மில் ஒருவனாய்!
இடுகாடு நோக்கி,
வாழ்நாள் குறித்தபடி!,,,

எழுதியவர் : கே.எஸ்.ராஜா,,, (23-Oct-13, 7:07 pm)
சேர்த்தது : KSRAJA
பார்வை : 62

மேலே