நட்பின் துரோகம் -அஹமது அலி
நட்பே கொண்டாய் தலைக்கனம்
நட்பில் மீறினாய் இலக்கணம்
ஆதலினால் கேள்
ஆனதுவோ பாழ்
அறிவாயோ எந்தன் மனக்கனம்!
(*-*)
மலையளவு நம்பிக்கை வைத்தது
கடுகளவு காரணம் சிதைத்தது
கேட்பார் பேச்சு
கேடென ஆச்சு
உன்னோடு யாவும் பொய்த்தது!
(*-*)
ஏற்று நின்றது எந்நெஞ்சம்
எட்டி உதைத்தது உன்வஞ்சம்
உடைந்தது உளம்
உண்டாகுமோ நலம்
தொலைந்து போனது செஞ்சம்!
(*-*)
நன்றி மறந்தே சென்றாய்
நட்பை அதிலே கொன்றாய்
நினைவினில் ரணம்
உறவினில் ஊனம்
சேரக் கூடுமோ ஒன்றாய்!