ஏன் சகாக்களே - தாரகை

எந்த இரவிலும்
உமிழ்நீர் வழியாமல்
உதடுகள் மூடி
உறங்கியதில்லை

எந்த பகலிலும்
திட்டமிட்டபடி
பணிகளை முடிக்க
பயிற்சி போதவில்லை

முகம் கழுவியபின்னரும்
கண்ணாடியில் பார்க்காமல்
முகத்தை வெளிக்காட்ட
தைரியமில்லை

சோப்பு நுரையை
அங்கத்தில் எங்கேனும்
விட்டுவைக்காமல்
குளியலறைவிட்டு
வெளிவந்ததில்லை

குளியலின்போது
கோவியநீரில்
முக்கால்வாசியை மேனிபடாமல்
தரையில் வார்க்கும் பழக்கம்
இன்னும் மாறவில்லை

ஒரே முறையில்
ஆடையின் பின்கொக்கியை
சரியாய் மாட்டியதாய்
சரித்திரம் இல்லை

தேடிஎடுத்த சீப்பை
தலை வாரியபின்
தொலைக்காமல் சாதனை
நிகழ்த்தியதில்லை

கல்லில் கொண்டுபோய்
காலை இடித்துவிட்டு
கல்லை திட்டும்
குணத்தில் மாற்றமில்லை

புத்திசுவாதீனமில்லா
வாலிப பெண்ணின்
கிழிந்த ஆடைக்குள்
பார்வை செலுத்தி
பலாத்காரம் செய்ய
கொஞ்சமும் தயங்குவதில்லை

தேசிய கீதம்
இசைக்கும் பொழுது
அமைதிகாத்து
தியாகிகளை நினைவுகூர
பொறுமையில்லை

நேசிப்போரை அன்பிற்காய்
யாசிக்கவிட்டு
ஏசுவோரின் கால்பிடித்து
அன்பைக்கொட்டும்
கீழ்த்தரமான குணத்திற்கு
ஒன்றும் குறைவில்லை

இத்தனை குறைகள்
இருப்பினும் நம்மில்,
வாய்கூசாமல் பிறரை
வசைபாடும் குணமேனோ
என் சகாக்களே!

எழுதியவர் : தாரகை (26-Oct-13, 11:39 am)
பார்வை : 415

மேலே