நெகிழி மரத்தின் நிழலில்

மழை பொழியுமுன்னே
கலைவதேனோ
மலட்டு மேகமே? - இவர்கள்
உன் மரபணுவையும் மாற்றிவிட்டார்களோ!..
இருக்கலாம்!

ஏய் வெண்ணிலவே! - இனி
ஆடை கட்டி பூமி வா
பிஞ்சுகளோடும் புணரும்
பிராணிகள் இங்கு வசிக்கின்றன...

ஏழு வண்ண வானவில்லே! - இனி
உன் வண்ணங்களை
அடிக்கடி எண்ணிக்கொள் - இவர்கள்
ஒன்றாகிலும் திருடி
ஊழல் செய்யக்கூடும்..

ஆர்ப்பரிக்கும் பெருங்கடலே! - இனி
சுறாக்களை
கரையில் காவல் வை - இல்லையேல்
பாலாறு போல் நீயும்
பாலைவனமாவாய்..

மானமுள்ள பறவைகளே!
ஊனில் தீ மூட்டி
உடனடியாய் செத்திடுங்கள்
நெகிழி மரத்தின் நிழலில்
மனிதன் மட்டும் வாழட்டும் ..

எழுதியவர் : செல்வா பாரதி (26-Oct-13, 5:07 pm)
பார்வை : 139

மேலே