கற்பனை கதை
கற்பனை கதை
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நான் இல்லாமல் போக போகிறேன்...எங்கு என்று கேட்பவரா நீங்கள், அல்லது எங்குதான் போவான் என பார்ப்பவரா......கேட்பவராக இருந்தாலும், பார்ப்பவராக இருந்தாலும் எங்கெல்லாம் நான் செல்கிறேனோ, அங்கெல்லாம் கொஞ்சமும் கவனம் சிதறாமல் உடன் வாருங்கள், அல்லது எனது வார்த்தைகளை கேளுங்கள்... ஏனெனில் கவனமாய் கவனம் சிதறுபவன் நான்.....
ம்ம்ம்ம்ம்........... சரி... ஆரம்பிக்கின்றேன்........
அது எனது 15வது வயது...... ஆம்.. பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறேன்..... ஒரு நாள் என் தோழி ஒருத்தியை ஆற்று நீர் அடித்துக் கொண்டு போக, நீச்சலே தெரியாத நான், ஏதோ ஒரு உத் வேகத்திலும், அவளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற உறுதியுடனும் ஓடும் நீருக்குள் குதித்து தட்டுத் தடுமாறி அவளின் தலை மயிரை பிடித்து மெல்ல மேலெழும்பி, தத்து பித்து நீச்சலோடு , அவளைக் கரைக்கு கொண்டு வந்தேன்.. அவளும் தண்ணீர் குடித்திருந்தாள் ....நானும் கொஞ்சம் குடித்திருந்தேன்..... ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவளை விழிக்கச் செய்ய எடுத்த முயற்சிக்கு இடையே கணத்தில் மூளைக்குள் மின்னியது.....
" ஆமாம் இது..... அபீதா தானே....."
ஆம்...... அபீதா தான்.......
அபீதாவா.......? தண்ணீருக்குள் விழுந்தது, அனிதாதானே .......
அனிதாவைதானே காப்பாற்ற நான் நீருக்குள் குதித்தேன்.....அதே உடை, அதே தலை மயிர்.......
விழுந்தது அனிதா.....காப்பாற்றப் பட்டது அபீதா.....
.............................................. என்ன கிளைக் கதைகளை யோசிக்கிறீர்களா..? விழுந்த அனிதா ஆற்றோடு போய் விட எனக்கு தெரியாமல் எங்கோ விழுந்த அபீதாவை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பது உங்களின் கற்பனை... அது எனதல்ல.....
நீங்கள் எனது கற்பனையை உற்று நோக்குங்கள்..... அளவோடு இருந்தால் அமுதமாக மாறும் கற்பனை அளவு கடக்கும் போது , வானத்தின் வண்ணத்தை, ஒன்று உறிந்து விடுகிறது அல்லது ஊற்றி விடுகிறது.......
பிணம் சுற்றும் முக்கில் சைக்கிளோடு விழுந்த என்னை, நினைவுகளில் கடந்து, விழாமல் கடக்க வைக்கும் கற்பனை, சூறைக்காற்றில் , பெரும் மழையில் மாட்டிக் கொண்ட சாத்தானை, வா வா... என வழி காட்டி வீட்டுக்கு அழைத்து வந்த, பத்து வயது, என்னை தொலைத்திருந்தது.......அன்று வீடு வந்த சாத்தானை என் நிலைக் கண்ணாடி காட்டியது, என் புகைப் படத்தை போலதொரு நிழல் படமாக.......
பாட்டி சொன்ன கதைகளில் மிகவும் பிடித்தது... ஏழாவது மகளை, கடத்திப் போகும் திருடன், முதல் மகனாய்தான் இருக்க முடியும்.....என்ற தேவதை வெள்ளைக்காரி கதை......அதில் நான் பார்வையாளன் மட்டுமல்ல. என் பாட்டியின் வார்த்தைகளில் வீசும் வெற்றிலை வாசத்தை சுமந்து, காடு மலை கடந்து, அந்த ஏழாவது மகளை காப்பாற்றி வரும் கதாநாயகனின் சாயலை சுமந்து போகும் வீரன் நானே......என்பதாக இன்று விரியும் கற்பனையின் அன்றைய நிஜத்தை நான் மறந்திருந்தேன்....
எங்கெல்லாம் மறதி நிரம்புகிறதோ, அங்கெல்லாம் கற்பனை பூசிக் கொள்ளும் மனம் எனக்கு... சரி கற்பனை என்பது, நிஜத்திலிருந்து வேறு என்று தானே இப்போதைக்கான ஒரு முடிவு.. அதுவும் சரியல்ல என்பது என் கற்பனையின் வாதம்.....
சட்டென உடைந்து விழுந்த மரத்தை விழுவதற்கு முன்னமே, இது விழும் என்று சொன்ன கற்பனையில் நான்கு பேர் இறந்திருக்க , விழுந்த பின் உயிர் சேதம் இல்லை என்று, தப்பித்ததில், ஒருவரின் கற்பனைக்குள் மரம் விழவேயில்லை என்பதை பிரிக்க முடியாத நிஜம் என்றே பறை சாட்டுகிறது கற்பனை....
வெறும் பறவை, பின்னோக்கி பறப்பது கற்பனை எனில், அங்கே பறவை பறக்கிறது என்பதே கற்பனை என்கிறேன்... பறக்காத பறவை சிறகை விரிக்காத வெறும் பறவை அது.. ஆக காட்சி பிழையில், சரியாய் விழுவதெல்லாம் நிஜம் ஆக வாய்ப்பில்லை.. சரி.. தவறாய் விழுவதெல்லாம் கற்பனையா....
கேள்வி தொடரும் பதிலில், நிழலைத் தவிர்க்கும் நிஜத்தில், சுவரை அணைக்கிறது தூரிகையின் கற்பனை....
நினைத்த மணித் துளியில் பள்ளிக்கூடம் செல்லும் நினைவுகளில் கொஞ்சம் கூடுதலாகவோ, குறைவாகவோ, ஆழ்மன கற்பனை கலந்தே பயணிக்கிறது.. மூன்றாவது படிக்கையில் கிரேஸ் மேரியுடன் போட்ட சண்டையை சரி செய்து கை கோர்க்க நினைக்கிறது கற்பனை.... சரி என்கிறது நினைவுகள்.. திரும்ப வரும் நினைவுகளில் கற்பனை நிஜமாகிறது. திரும்ப வராமல் தகிடு தத்தம் செய்யும் கற்பனை, காலத்தை மெல்ல விழுங்க முயற்சிக்கிறது.... இங்கே எல்லாருக்கும் தெரியும் கற்பனையில், ஒரு பேய் மரம், ஒரு மாரியம்மன் கோவில் தத்தமது இடம் மாறி அமர்தலில், ஒரு ஆழ்மன கிறுக்கல் கோடு போடுவதாக தோன்றுகிறது.. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வரிகளை படித்ததாகவே உணர்கிறது கற்பனை.. நிஜத்தில் எதையுமே மனம் படிக்கவில்லை.... படித்ததாக நினைக்கவும் இல்லை என்று வாதிடுவதில் காலம் செய்யும் கற்பனையை உள் வாங்க தடுமாறுகிறது, தொடர்பில்லாத வரிகள்... எழுதியவன் கற்பனையை தேடுபவனாக இருக்கலாம்....
போதும் என்ற மனதிலே, பனி பொழியும் பாதை பயணிக்கிறது.. அங்கே ரோஜாக்களும் ஆப்பிள்களும் பூத்துக் குலுங்குவதாக நினைப்பதில் கற்பனை என்ன வேண்டிக் கிடக்கிறது.. சரி.. நிஜம் என்பவர்கள், கற்பனையை கடந்து விட முயற்சியுங்கள்.. அல்லது கற்பனையாகவே நிஜம் பாருங்கள் .. கற்பனைக்குள்ளும் நிஜம் இருப்பது கற்பனையல்ல அல்லவா.....
முகப் பூச்சு கற்பனை என்றால்....... முகம்....?
சரியான இடம்... இந்த இடமே.... விளங்குதளுக்கான புள்ளி.. என்று ஆசுவாசப் படுத்தி, தெளிந்த மனதிற்கு இன்னும் ஒரு விளக்கம்.....
முகப் பூச்சே கற்பனை என்றால்... ஏது அங்கே முகம்....!
விளக்கம் விளங்குதல்... இரு வேறு துருவங்கள்.. துருவங்களாய் நீளும் கற்பனையில் தூர தேசம் கடக்கவே காத்திருக்கிறது, நினைவுகளின் சுமைகளென கற்பனைகள் அல்லது கற்பனைகளின் உவமையென நினைவுகள்....பெரு வெடிப்பும், பெரு வெளியும் வெறும் கற்பனை என்று முடித்துக் கொள்வதா... பின் சென்று கொஞ்சம் சரி படுத்தும் கற்பனையா...? காடும் மழையும், கடைக்கண்ணில் தூசியாய் விழுந்த கற்பனை எனில், நான் யார் என்ற கேள்வியோடு எனது கற்பனை இன்னும் விரிகிறது......தொடர்பற்ற தொடர் சிந்தனைகளின் உச்சியில் பேய் மழை பொழிய செய்து வெறிக்க வெறிக்க பார்ப்பதாக கற்பனை செய்ய தூண்டும், நள்ளிரவு ஜன்னலை திறக்கவரும் கைகளில் என்னிடமிருந்து திருடப்பட்ட பேனா முறைக்கிறது.. அது சிந்தும் மையில் நிறைந்து கொண்டே போகும் ஆற்றில் ......
அபீதா விழவேயில்லை என்று, கற்பனை , முகம் திருப்புகிறது.....
சரி.. நான் என்ற உங்களது கற்பனையை உங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்..... ஆம்.... இக் கதையை வாசிக்கும் உங்களின் கற்பனைதான் நான் என்பது எனது கற்பனையும் கூட.....
கற்பனை தானே........!?