பாதுகாப்பற்ற உலகத்தில் வசிப்பவள் ரோஷான் ஏஜிப்ரி
புண்ணிய பூமி என்ற
கன்னி கழிந்த
மனிதம் தொலைந்த மண்ணின்
வனாந்திரத்தில் வாழ்வது
எத்தனை கடினம் என்பது
இருள் சூழ்ந்த இன்றைய
விஷமப் பொழுதுகளிலிருந்து
விளங்க முடிகிறது..
திரும்பும் திசையெங்கும் திகில் முகங்கள்
பூக்கூடைகள் வைத்திருக்கும் என்மேல்
சாக்கடையினை வாரியிறைக்க
சமயம் பார்த்தபடி காலம்
வழி நெடுகிலும் பின் தொடர்ந்து
நிலவுவரை சென்று திரும்பி
வாசல் வரை வர்ணிக்கிரவன்
சந்தடிகளற்ற சமயம் ஒன்றிற்கே
சாதகம் பார்க்கிறான்
நெரிசலில் உரசியபடி தினமும்
அருவருப்பின் உச்சத்தில் மேய்ந்து
நெளிகின்றன மண் புழுக்கள்
என் ஏற்ற இறக்கங்களை
கொத்திப் பறக்கின்றன
பெயர் தெரியாத கழுகுகள்
முள்ளம் பன்றிகளின் ஆக்கிரமிப்பில்
எனது சேனை நிர்மூலமாக
இன பந்தங்களை தொலைத்த மண்ணில்
இன்றைய என் இருப்பின்
இருபத்து நான்காவது
இறுதி மணித்துளியும்
பாதுகாப்பு அற்றதாகவே ஆயிற்று!
எனவேதான் நான்
வாழ்வின் கடைசி பாடலை
கடலிடமே சொல்லி கரைகிறேன்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

