செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகத்தை
விரிவாய் ஆராய
செல்கிறது ஏவுகலன்.
~~தன்னம்பிக்கையில் விஞ்ஞானம்
செவ்வாய் தோஷத்தில்
ஊர்வாய் மூடமுடியாமல்
தடைபடுகிறது திருமணம்.
~~மூடநம்பிக்கையில் அவமானம்
வெல்வாய் என்கிறது
செவ்வாய் கிரகம்
மங்களயான் சாதிக்கிறது
மாங்கல்யம் ஏங்குகிறது
தவிப்பாய் என்கிறது
செவ்வாய் தோஷம்
கிரகத்தை கணிக்கும்
கிறுக்கு ஜோசியர்களே !
கட்டத்தை மாற்றுங்களேன்
கல்யாண கட்டம்
உள்ளதென்று.......
பொய்யுரைத்திடுங்களேன்
அந்த முதிர்கன்னிக்கு
திருமணம் நடைப்பெறட்டுமே..!
வசூலாகும் மொத்த
மொய் பணத்தையும்
பொய்க்காமல் நான் தாரேன்.