கருவாச்சி காதல்

அத்த பெத்த ராசாவே
ஜல்லிக்கட்டு காளையானாலும்
மல்லுக் கட்டி ஜெயிக்கும்
வெட்டருவா மீச வீரனே !!!
அறியா வயசுல
நாவப் பழம் பறிக்கையில
நாடிக்குள்ள வந்தவனே
கண்ணாமூச்சு ஆடுறப்ப
கனவுல நுழஞ்சவனே !!!
பருவவயசுல
சந்தைக்கி போனவள
சாடையில பேசி சாச்சவனே
பல்லாங்குழி ஆடயிலே
பாவி மனச பறித்தவனே !!!
ஒளிஞ்சி விளையாடையிலே
உசுரை திருடி போனவனே
வாய்க்கா வரப்பு சேத்துல
எனைத் தள்ளி கொன்னவனே !!!
அத்தை மவனு
ஒத்தையா போனவள
வழி மறிச்சி
முத்தமொன்னு கேட்டவனே !!!
ஆடு மேய்க்க போனவள
பாதியில விட்டிட்டு
படிக்க பட்டணம் போனவனே !!!
வடகாத்து வீசுதடா
செவி சாச்சு கொஞ்சம்
என் சோகத்த கேளுடா !!!
உன்னோட நெனப்பால
நெஞ்சுக் கூடு வேகுதடா
பொச கெட்ட சிறுக்கி
எனக்கு கிறுக்குதான் புடிக்குதடா !!!
வருசங்க தொலைஞ்சாலும்
உன் நெனப்பு தொலையலடா
அத பத்திரமா முடிஞ்சுதா
வைச்சிருக்கேன் முந்தானில !!
தோட்டம் தொரவெல்லாம்
உன் வாசம் வீசுதடா
உன் கடுதாசி காணாம
கண்ணு ரெண்டும் கலங்குதடா !!!
தென்னந்தோப்புக் கிளியும்
உன் பேரை சொல்லுதடா
மாந்தோப்பு மைனாவும்
உன்ன பத்தி பாடுதடா !!
மச்சானே
உன் கம்மம் காட்டு
முத்தமும் காயலடா
நீ வாங்கி கொடுத்த
மல்லியும் வாடலடா !!!
மாமானே
நீயில்லாம கருவாச்சி
நானோ வெறுங்கட்டையடா
உன் மாருல சாயாம
இந்த கட்ட சாகதடா !!!
தாரமாக்க தாலியோட
நீ வருவேன்னு
உசுரோட உசுரு சேத்து
உன் கூட வாழறேன்டா!!!
எங்கப்பனும் வரன பாக்குராரு
உனக்கு வாக்கப்பட நெனச்சவளுக்கு
வாய்க்கரிசி போடத்தான் போராரு. !!!
தனி மரமா நிக்குறேன்டா
சேதி சொல்ல ஆளுமில்ல
நீயோ பட்டணத்து மங்கையோட
வந்து இறங்கிடாதடா !!!
பாழாப்போன என் மனசு தாங்காது
அரளியை அரச்சி குடிச்சு
பாடையில போய்டுவேண்டா !!!