கல்லறை வரை வருகின்ற நட்பு

இளமை தொட்டு முதுமை வரையில்
==இணைந்தே வருவது நட்பாகும்
வளமாய் என்றும் வாழ்த்தும் திட்டும்
==வழங்கி மகிழ்வது நட்பாகும்
உளமும் உயிரும் உருகிப் போற்றும்
==உயர்ந்த உறவே நட்பாகும்
குளமும் நிலமும் போலே என்றும்
==கொடுத்து சிறப்பது நட்பாகும்

நிலைமை என்ன ஆன போதும்
==நிலைத்து நிற்பது நட்பாகும்
சிலைபோல் அழகாய் செதுக்கி விட்ட
==சிறந்த ஓவியம் நட்பாகும்
விலைமேல் விலைதான் வைத்தே கேட்பினும்
==விலைபோ காதது நட்பாகும்
அலைமேல் அலைபோல் அனுதினம் அன்பாய்
==அடித்துக் கொள்வதும் நட்பாகும்.

அற்புத அன்பின் அடையா ளம்தான்
==அழியா உண்மை நட்பாகும்
கற்பனை அன்றி நிஜமாய் நின்று
==கரங்கள் கொடுத்திடும் நட்பாகும்
பற்பல காரணம் கொண்டு சிலநாள்
==பகைமை வளர்த்திடும் என்றாலும்
சிற்சில நாட்களில் பகைமை மறந்து
==சேர்வது நடப்பதன் இயல்பாகும்

நல்லவன் கெட்டவன் என்பா ராமல்
==நம்பி வைப்பது நட்பாகும்
வல்லவன் கோழை வசைபா டாமல்
==வளர்ந்து கொள்வது நட்பாகும்
சில்லறை கோடி பணம்பா ராமல்
==சேர்ந்து கொள்வது நட்பாகும்
கல்லறை வரையில் வந்தே நின்று
==கண்ணீர் சொரிவது நட்பாகும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Nov-13, 9:03 pm)
பார்வை : 280

மேலே