நாற்காலி பொம்மலாட்டம் ----அஹமது அலி
நாற்காலி பொம்மலாட்டம்
நாளும் நடக்குது! இங்கே நாளும் நடக்குது!!
அத பார்த்துபுட்டு தானே இப்போ
நாடு சிரிக்குது! நம்ம நாடு சிரிக்குது!!
அஞ்சி கெஞ்சி அப்பாவியா வந்து
ஓட்டு கேக்குறான்! வந்து ஓட்டு கேக்குறான்!!
ஜெயிச்ச பின்னே கஞ்சி சட்டையில்
வெறப்பு காட்டுறான்!ரொம்ப வெறப்பு காட்டுறான்!!
கோட்டைக்கு போறதுக்கே
வேசம் கட்டுறான்! அவன் வேசம் கட்டுறான்!!
அங்கே போன பின்னே மக்களுக்கு
குழிய வெட்டுறான்! ஆழக் குழிய வெட்டுறான்!!
நாலு காலில் ஒன்னு முறிஞ்சா
முட்டுக் கொடுக்குறான்!சிறு கட்சிய முட்டுக் கொடுக்குறான்!!
காலு கொஞ்சம் உறுதியான பின்
எட்டி உதைக்கிறான்! தூர எட்டி உதைக்கிறான்!!
நாற்காலி ஆட்டம் கண்டும்
ஆட்டம் கொறையல!இவங்க ஆட்டம் கொறையல!
பாட்டன் தாத்தன் பேரன் வரைக்கும்
பட்டா போடுறான்! நாற்காலிய பட்டா போடுறான்!!
நாலு பேரு சேர்ந்தா போதும்
கட்சியாகுது! புதுசா கட்சியாகுது!!
நாலு ஓட்டு விழாமத் தானே
நாறிப் போகுது!நாற்காலி கனவு சிதைந்து போகுது!
உட்கார்ந்தவன எழுப்பத் தானே
தள்ளு முள்ளுங்க! பல தில்லு முல்லுங்க!!
உட்கார்ந்தவன் உடும்புப் பிடியோ
தளராதுங்க! அது நாற்காலி தரும் பலம் தானுங்க!!
அஞ்சு வருசம் ஆன பின்னே
பசை காஞ்சு போகுமே! பதவி பறி போகுமே!!
மீண்டும் வேசம் கட்டி தெருக்கூத்து
களை கட்டுமே!!மக்கள் கூட்டம் கை தட்டுமே!!
நாற்காலி பொம்மலாட்டம்
நாளும் நடக்குது! இங்கே நாளும் நடக்குது!!
அத பார்த்துப் புட்டு தானே இப்போ
நாடு சிரிக்குது! நம்ம நாடு சிரிக்குது!!
............................................................................
(இது நண்பர் திரு.முருக பூபதி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எழுதியது.
நன்றி திரு. முருக பூபதி)
..........................................................................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
