இப்படி இருக்குமா எதிர்காலம்

மண்ணடித் தடமும்
மாட்டுவண்டி புழுதியும்
மறைந்தே போயிருக்கும்...

இரும்புச் சக்கரவாகனம்
தீப்பொறி பறத்திப் போகும்
வேதிச்சலவை
சாலைகளில்...

சத்தமெனப்படுவது
செவியறைக்குள் மட்டுமே
பெரியதாய்
ஒலித்துக்கிடக்கும்.....

வெளிச்சமெனப்படுவது
விழி நோக்குமிடங்களில்
மட்டும்
ஊசிகளாய் துளைத்தெடுக்கும்..

எங்கிருந்தோ பறந்துவரும்
சவரக்கத்தி.... அதன்
இடப்பக்கம் பொருந்தியிருக்கும்
தண்ணீர் பீய்ச்சி...
கழுத்தை விட்டு நகராது
காசுஅட்டை தேய்க்கும் வரை...!

முத்தமிடுதலே
அறிமுகமாகும்..! கலவி
கண்டு களித்த பின்பே
கல்யாணமென்பது
தனியுரிமை சட்டமாகும்...!!!

உடையென்பது
ஒட்டியிருக்கும்..
உரித்தெடுக்கலாம்...! ஆடைக்கு
விளக்கம்
போர்த்திக் கொள்வதாகும்....

தண்டுவடக் கிழிசலில்
செருகப்படும் நுண் தகடு ....
அனிச்சையாய் விரல்கள்
கடத்தும்
தொடுதிரை வினாக்களின்
விடைகள் பதிவிட..

அப்பொழுதும் நடந்திருக்கும் ...

நெகிழியிலை சலசலக்கும்
சலவைக்கல் மரத்தடியில்
அரைக்கால் சட்டை
சிவப்புமீசை நாட்டாமை....
மின்சவுக்கெடுத்து
விளாசக்கூடும்....
சாதிதள்ளிக் கூடிய
ஏதோவொரு டியூடை....

செம்புக்கு பதில் முத்திரை
ரொட்டியும்...
வெற்றிலைக்குப் பதில்
வேகவைத்த கோழியும்...!!!

எழுதியவர் : சரவணா (12-Nov-13, 5:39 pm)
சேர்த்தது : கட்டாரி
பார்வை : 114

மேலே