536 டாஸ்மாக்- மக்களாட்சி

மழையில்லை! கஞ்சி வளமில்லை! எம்மேல்
பிழையில்லை! எங்கும் பெரிதாய்த் --தழைத்துள்ள
'டாஸ்மாக்' கடைதிறக்க 'டாட்டா' வறுமைக்கே!
'பாஸ்மார்க்' கொடுப்பீரே பார்த்து!

தீமையாய் யாரே தெரிகில்லார்? தெங்கு,பனை
ஊமையாய் உள்ளதுபோல் ஊருறையும்!--ஆமையாய்
ஒன்றிரண்டு கற்றோரும் உள்ளே தலையிழுத்து
நன்றென்றே உள்ளார் நனி!

என்றும் நமதாட்சி இங்கிருக்கும்! 'டாஸ்மாக்'
என்றும் உமக்கிருக்கும்; ஏன்கவலை? - கொன்றிடவே
போர்,எதற்கு? இக்கடைகள் போதாதோ? காவிரியில்
நீரெதற்கு ? நீ நனைவாய் நன்கு!

ஆறென்றால் காவிரிதான்! அதுவோர் காலம்!
ஆறென்றே இன்றோடும் அரசின் பானம்!
கூறென்றால் அதன்,ஆட்டம் கூறப் போமோ?
பேறென்றால் சுதந்திரத்தின் பேறும் ஈதோ?!

மதுர மான மொழிமாறும்!
=மழலை நடைகள் மீண்டுவரும்!
அதர பானம் மறந்துவிடும்!
= 'அடியாள்' குடும்பம் பறந்துவிடும்!
சிதறும் ஓடும் செருப்புகளும்!
=சிறுதா ரையோ வாயோடும்
புதரோ, கழிவுச் சாக்கடையோ
=புரியா துருளும் இடமாகும்!

மதுபா னம்தான் இனியிங்கே
=வருமா னம்காண்! வளரட்டும்!
இதுதான் மக்கள் ஆட்சியடா!
=இதுவே அழிவின் சாட்சியடா!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (15-Nov-13, 7:13 am)
பார்வை : 310

மேலே