வெள்ளையன் வேட்டை -கே-எஸ்-கலை
கொஞ்சமும் அச்சமின்றி
குரூரங்களின் சாம்ராஜ்யத்தில்
நெஞ்சம் நிமிர்த்தி வேட்டையாடும்
வெள்ளையரே...எங்களூர்
ஊடக, அலைவரிசைகளின்
நாடக கைவரிசைகளை அறிவீரோ ?
=======
அவஸ்தைகளை
விவஸ்தையற்று செய்தியாக்கி,
விகாரங்களை விளம்பரங்களாக்கி
வீடு மேல் வீடு கட்டி
கோடி மேல் கோடி குவித்து
விசாலச் செல்வந்தர்களாய் வாழும்
ஊடக வியாபாரிகள்
வெறும் நாடகதாரிகள் !
கோரங்கள் கெடுத்துக்
குட்டிச் சுவராக்கும்
விகாரங்களை விடுத்து,
குட்டியோடு சுவருக்குள்
படுத்துக் கிடப்பவனை
தேடிஓடும் “காம”ராக்களே
ஊடகங்களின் உயிர்நாடி !
சாவுச் செய்திகளை
சலனமற்ற சிரிப்போடும்
சல்லாப சேகரிப்புகளை
சுளிக்காத முகத்தோடும்
சுருக்கமாய் விரிவாய்
விழிக்காத அகத்தோடு
விடிய விடிய துப்புமிந்த
விகாரி ஊடகங்கள் !
கைநாட்டுக்காரர்களின்
கையூட்டுப் பிச்சைவாங்கி
அக்காலத்திலும் இக்காலத்திலும்
வக்காலத்து வாங்கிஇவர்கள்
பொய்யூட்டி பொய்யூட்டியே
மக்களின் விடியலை
சில்லறைக்கு விற்றுவாழும்
பிழையான பிறப்புகள் !
சக்கிலாவோ
சன்னி லியோனோ
சாக்கடையாய் கிடக்கும்
புகைப்படங்களைக் காட்டி
கற்பழிப்புச் செய்தியையும்
சபலப் புத்தியோடு
சந்தைக்கு கொண்டு வரும்
சண்டாளிகள் !
தலைவாரிப் பூச்சூடி
தவறாத வகிடெடுத்து
அழகாக வத்திரமிட்டு
ஒப்பனையும் கற்பனையும்
வரியாக்கி மொழியாக்கி
விற்பனையைக் குறியாக்கி
தப்பு தப்பாய் தமிழை
செப்புகின்ற இவர்களுக்கு
தமிழையே காப்பாற்ற முடியவில்லை
தமிழனையா காப்பாற்றுவார்கள் ?
அபத்தமானதோ விபத்தானதோ
அட்டைப் படத்தில் கொட்டை எழுத்தில்
தலைப்புச் செய்தியாய்ப் பொருத்தி
சந்திக்கு கொண்டுவர
முந்திக் கொள்வதில் முன்னோடிகள் !
=======
வெள்ளைக்காரர்களே....
உங்கள் வீரம் பிடித்திருக்கிறது.....
கோட்டைக்குள் புகுந்து
குரல்வளைப் பிடித்திழுத்து
விடத்தை வெளியிழுக்கும் உங்கள்
வீரம் பிடித்திருக்கிறது...!
உங்களோடு உரசிக் கொள்ள
எங்களூர் ஊடக நரிகள் ஓடிவரும் !
குப்பிகளில் நிறைத்தாவது கொஞ்சம்
மூத்திரம் கொடுங்கள்...
அதைக் குடித்தாவது - சொட்டு
புத்திவரட்டும் இந்த போக்கிரிகளுக்கு !