மோனலிசா
பெண்களில் பேறு பெற்றவளே !
பேசாமல் பேசும் ஓவியமே !
சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே!
நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல!
ஓவியர் லியானர்டோ டா வின்சின் கண்களில்
பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி போனவள்.
பாரிஸ் நகரில், உன்னை ஒளிந்திருந்து பார்க்க
நினைப்பவர்களையும், நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.......,
அப்படி என்ன உன்னிடம் ...சிறப்பு !
ஓ.....அது தானோ ....உன் புன்னகையால் நாங்கள் கொண்ட வியப்பு...?
நீ புன்னகைகிறாயா...? அல்லது காண்பவர்களுக்கு
புது மொழியை தருகிறாயா...?
ஒவியமதில் ஒளி வீசும் ஒப்பற்ற தாரகையே....., ஒப்பு கொள்கிறோம்
உன்னை வரைந்தவர் ஒரு மாமேதையே
நான் உன்னை வைத்து கவிதை சொல்லவா!
நீ டாவின்சியின் மூன்று வருட காதலி அல்லவா!
வரலாற்று ஜன்னல் வழி உலகமே உனை பார்குதடி!
யாரைத்தான் தேடுகிறாய் இனியேனும் சொல்வாயா !
தலைகுனிந்த தூரிகையில் - தலை நிமிர்ந்த
உன் -தைரியம் கண்டேன் -அதை உனக்கு
பெரியோர்கள் ஊட்டி இருப்பார்கள் -எங்களுக்கோ
பெரியார் …வந்த பின்புதான்…..
நீ புத்திரசோகத்தில் இருந்த போதும் உனை மோனலிசா என்கிறார்கள்
எங்களையோ ! நீ மலடி சா… என்கிறார்களே!
உன் சின்ன சிரிப்பிற்காய் - நூற்றாண்டுகளை கடந்தவள் நீ!
நாங்கள் சிரித்துக் கொண்டே - வீதி கூட தாண்ட முடிவதில்லை.
உனை அழகாக்க - 40 அடுக்கு வண்ணங்கள் பூசினார்களாம் ..
எங்கள் மீதோ .. வர்ணங்களை அல்லவா … பூசி இருக்கிறார்கள்…
நீ காதலியா, கள்ளக்காதலியா ,கண்ணியா,கழிந்தவளா
இப்படி ஆயிரம் பட்டம், -ஆனால்
டாவின்சிக்கு ஓரே ஒரு பட்டம் மட்டும் தான் சிறந்த ஓவியன் என்று!
இன்னும் நீ மௌனமாக இருந்தால் நம் மீது மேலும் மேலும் சாயம் பூசி
பண்பாடு என்று சொல்லி பயன்படுத்துவார்கள்
எழுந்து நில்!எழுச்சி கொள்! தமிழச்சி சொல் கேள்!
உன் மீது காதலை விட எனக்கு கோபம்தான் அதிகம் காரணம் தெரியுமா ……
இத்தாலி இளவரசியே மோனலிசா … உன் தேசதுக்காரி தான்
என் சொந்தங்களை முள்வேலிக்குள் முடக்கியவள்.
புலிக்கொடி மீது -பலிக்கொடி ஏற்றிவிட்டாள் .
எங்கள் குலக்கொடி செங்கொடி.....
கம்பிக்குள் வாடும் என் தம்பிகளும்…
ஆயிரம் ஆயிரம் தமிழச்சிகளும் புறப்பட்டு விட்டோம்…
இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பவளே---- மோனலிசா..........
நாங்கள் இல்லாமல் போனாலும்----- விரைவில் எங்கள்
தனி ஈழத்தை பார்க்கும் புண்ணியம் உனக்கு வாய்க்குமடி …….
ராணிமோகன்