யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன
முடித்துவிட்டேன் நல்ல
முறையில் பட்டப்படிப்பை,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
சேர்ந்துவிட்டேன் ஓர்
பன்னாட்டு நிறுவன வேலையில்,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
இருமனங்கள் இணையவே திருமணம்
செய்துகொண்டேன் நல்லதொரு
பணியில் உள்ள பெண்ணை,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
செட்டில்லாகி விட்டேன் என் வீடு,
என் மனைவி,என் மக்களென்று,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
இன்பமாய் களிப்பேன் சுற்றுலாவை
தேர்தலுக்கென விடும் விடுமுறைதினத்தில்,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
திட்டித்தீர்ப்பேன் ஆட்சிசெய்வோரை
விலைவாசியேற்றம் என் வீட்டு
பட்ஜெட்டில் துண்டு விழச்செய்கையில்,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
அரட்டை அடிப்பேன் பொழுதுபோகாமல் நண்பர்களோடு,அரசியல் ஓர் சாக்கடை என்று,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
மனநிம்மதி தேடுவேன் ஆன்மிக சுற்றுலாவில்
மனைவியோடு -பணி ஓய்வுக்குப்பின்,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?
நன்முறையில் படிக்க வைப்பேன்
என் மகனை இனி அவன் தொடர்வான்,
யார் ஆட்சிக்கு வந்து எனக்கு என்ன?